கழுத்துக்கு அலங்காரம் (Jewels on a necklace)

நீதி 3:22. அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2VG2RAEaPQo

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அநேகர் தங்கள் கழுத்தில் அணியும் நகைகளால் தங்களை அலங்கரித்துக்கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதத்தில் கழுத்தில் அணியும் நகைகள் வேறுபடுகிறது. ஆப்பிரிக்காவில் ஒரு விதமான நகைகளும், இந்தியாவில் ஒருவிதமான நகைகளும் அணிவதை நாம் பார்க்கமுடிகிறது. இந்தியாவில் இருக்கும் பெண்களின் கழுத்தில் அணியும் நகைகளில் பல்வேறு வகைகளுண்டு. மாலைபோன்ற சங்கிலி, சோக்கர்ஸ் வகையுள்ள சங்கிலி போன்ற நகைகளை பெண்கள் அணிவார்கள். அதிலும் சில பெண்கள் கல் வைத்த நகைதான் தங்களுக்கு அலங்காரமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். சிலர் கல்வைத்த நகையென்றால் அந்த கல் சீக்கிரம் விழுந்துவிடும் என்ற அச்சத்தில் கல்லில்லாத சங்கிலியை வாங்கி தங்கள் கழுத்தில் போட்டு அலங்கரித்துக்கொள்ளுவார்கள்.

அதுபோல, ஆண்கள், கழுத்தில் சிலருக்கு வெள்ளியினால் செய்யப்பட்ட தடிமனான சங்கிலி போட்டுக்கொள்ளுவார்கள். கிறிஸ்தவர்கள் அநேகர், சிலுவை வைத்த சங்கிலியை போட்டுகொள்ளுவதில் வீண் பெருமைகொள்ளுவார்கள். பெரிய பெரிய பாப் பாடகர்கள் கூட சிலுவை வைத்த சங்கிலியை போட்டுகொண்டு தங்களை அலங்காரமாக காட்டிக்கொள்ளுவார்கள். மாணவர்கள் தாங்கள் கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலி மற்றவர்களுக்கு அலங்காரமாக தெரியவேண்டும் என்ற காரணத்திற்காக சட்டையில் இருக்கும் மேற்பட்டனை போட்டுக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட சங்கிலிகளை போட்டுகொண்டு தங்களை அலங்காரமாய் கட்டிக்கொள்ள நினைப்பவர்கள் அநேகம்.

ஆனால், வேதம் சொல்லுகிறது ஞானமும் புத்தியும் நம்முடைய கழுத்துக்கு அலங்காரமாய் காணப்பட வேண்டும் என்பதாக. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் (நீதி 3:13). ஞானம் விலையுயர்ந்த முத்துக்களைப்பார்க்கிலும், வெள்ளியை பார்க்கிலும், பசும்பொன்னைக்காட்டிலும் பெரியது. என்னத்தை சம்பாதித்தாலும் ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்று வசனம் கூறுகிறது. விலையுயர்ந்த ஆபரணங்களை கழுத்தில் போட்டும், ஞானம் இல்லாவிட்டால் எல்லாம் வீண்.

ஞானத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் கிருபையும் சத்தியமும் நம்மைவிட்டு விலகாமல் காத்துக்கொள்ள வேண்டும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள் (நீதி 3:3) என்று வசனம் கூறுகிறது. கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது. அந்த கிருபையை நாம் போக்கடித்துவிடக்கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு நாம் கிருபை சார்ந்துகொள்ளுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு கர்த்தர் நமக்கு ஞானத்தை தருவார். அவருடைய கிருபை உங்கள் கழுதைவிட்டு நீங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுபோல அவருடைய சத்திய வசனத்தை கழுத்தில் போட்டு இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சமயத்துக்கேற்ற வார்த்தைகளை ஆவியானவர் ஏற்றவேளையில் உங்கள் சிந்தையில்கொண்டு வந்து உங்களோடு பேசுவார். ஆகையால் அதிகமாக சத்திய வசனத்தை அசைபோடுங்கள். கர்த்தருடைய வசனம் வானங்களில் நிலைத்திருக்கிறது. கர்த்தருடைய கிருபையையும் சத்தியத்தையும் கழுத்தில் போட்டுகொண்டு, ஞானத்தையும் புத்தியையும் சம்பாதிப்பீர்களென்றால், அதுவே உங்களுக்கு அலங்காரமாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org