ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள் (Encourage one another).

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே,     ஒருவரையொருவர் தேற்றி,     ஒருவருக்கொருவர் பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்(1 தெச. 5:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sHkRy8Rnx9k

கர்த்தருடைய ஜனங்கள் ஒருவரையொருவர் தேற்றி,     ஊக்கப்படுத்துகிறவர்களாய் காணப்பட வேண்டும்.  ஒருவருக்கொருவர் பக்தி விருத்தியை உண்டாக்கி,     அவர்களைக் கர்த்தருக்குள் கட்டுகிறவர்களாயும்,     பலப்படுத்துகிறவர்களாயும் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆதி சபையின் நாட்களில் ஆத்துமாக்களைக் கவனிக்கிற பொறுப்பு ஒரு குறிப்பிட்ட நபரிடம் காணப்படவில்லை. எல்லா விசுவாசிகளும் அப்பணியைச் சந்தோஷத்தோடு செய்தார்கள்.  தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளும் கூட அப்படிப்பட்டவர்களாய் காணப்பட்டார்கள் என்று மேற்கூறிய வசனம் வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் தான் நிறுவின சபைகளுக்குத் திரும்பச் சென்று அங்குள்ள விசுவாசிகளைத் திரும்பவும் விசாரிக்கிறவனாயும்,     உற்சாகப்படுத்துகிறவனாயும் காணப்பட்டான். பவுல்  பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுள்ள  சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று  போய்ப்பார்ப்போம் வாரும் என்றான் என்று அப். 15:36ல் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய வாயின் வார்த்தைகள்   பக்தி விருத்திக்கு ஏதுவானதாகவும் கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமான நல்ல வார்த்தைகளாகவும் காணப்பட வேண்டும். நீங்கள் கட்டுகிறவர்கள் என்றும்,     திரும்ப எடுத்துக் கட்டுகிறவர்கள் என்றும்,     திறப்பானதைச்  சீர்செய்து அடைகிறவர்கள் என்றும் பெயர் பெற வேண்டும் என்று வேதம் கூறுகிறது. 

கடைசி நாட்களில் சபை கூடிவருதலில் சோர்வு விசுவாசிகளிடத்தில் காணப்படுகிறது. உலகக் கவலைகளும்,     ஐசுவரியத்தின் மயக்கமும்,     திருப்தியில்லாத வாழ்க்கை முறைகளும் ஜனங்களை பின்னுக்கு இழுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,     சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்,     ஒருவருக்கொருவர்  புத்திசொல்லக்கடவோம்,     நாளானது சமீபித்துவருகிறதை  எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்  புத்திசொல்லவேண்டும் என்று எபி. 10:25ல் எழுதப்பட்டிருக்கிறது. சபை கூடிவருதலை நாமும் விட்டுவிடக் கூடாது,     மற்றவர்களும் விட்டுவிடாதவர்களாய் காணப்படுவதற்கு அவர்களுக்கு புத்திசொல்லி,     அவர்களை  உற்சாகப்படுத்படுத்துகிறவர்களாய்  காணப்படுங்கள். சவுல் தாவீதின் உயிரை வேட்டையாடுகிறவனாய் காணப்பட்டான். ஆனால் அவன் குமாரனாகிய யோனத்தான் தாவீதின்  கைகளைத் திடப்படுத்துகிறவனாய் காணப்பட்டான். அவனை நோக்கி,     நீர் பயப்படவேண்டாம்,     என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது,     நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்,     அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்,     அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்று கூறி தாவீதை தேற்றுகிறவனாகவும் உற்சாகப்படுத்துகிறவனாகவும்  காணப்பட்டான். யோனத்தானைப்  போலச் சோர்ந்து போனவர்களை உற்சாகப்படுத்தி,     தளர்ந்து  போனவர்களைத் திடப்படுத்தி,     ஊக்கப்படுத்துகிற  கிருபைகளைக் கர்த்தர் உங்களுக்கு தருவார். நீங்கள் அப்படிப்பட்ட  ஊழியத்தைச் செய்யும் போது அதற்குரிய பலனை பரத்திலிருந்து கர்த்தர் உங்களுக்கு அருள்செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae