எல்லாவற்றையும் அருளுகிற தேவன் (God will give you all things).

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்,     அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mR1bQZTRY0c

பிதாவாகிய தேவன் மனுகுலத்திற்குக் கொடுத்த பெரிதான ஈவு அவருடைய நேசகுமாரனாகிய இயேசுவை இப்பூவுலகில் அனுப்பியதாகும். அது அவர் நம்மேல் கொண்ட  அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. தேவன்,     தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு,     அவரைத் தந்தருளி,     இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 கூறுகிறது. இயேசு மனுக்கோலம் எடுத்து இந்த பூமியில் தோன்றவில்லையெனில் நாம் இரட்சிக்கப்படுவதும்,     பாவமன்னிப்பைப் பெற்று மீட்கப்படுவதும் கூடாத காரியம். அவர் கல்வாரிச் சிலுவையில் தன்னுடைய  இரத்தத்தைச்  சிந்தி சபையைக் கிரயத்திற்குக் கொண்டார். ஆகையால் நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிறோம். நமக்கு முன்பாக ஒரு மாதிரி வாழ்க்கை வாழ்ந்து,     என்னைப் பின்பற்றுங்கள் என்று  கூறிச்சென்றார். மாத்திரமல்ல,     நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ளும் படிக்குத் திரும்பவும் வரப்போகிறார். ஆகையால் தான் பிதாவாகிய தேவன் நமக்கருளின்  எல்லா ஆசீர்வாதங்களிலும் மேலான ஆசீர்வாதம் இயேசுவாய் காணப்படுகிறார்.

தம்முடைய சொந்தக்குமாரனன் என்று இயேசுவையே சிலுவையில் நமக்காக ஒப்புக்கொடுத்தவர்,     அவரோடே கூட மற்ற எல்லா நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் நமக்குத் தருவது அதிக நிச்சயமாய் காணப்படுகிறது. அவரோடே கூட  என்ற வார்த்தையிலிருந்து இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு,     அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிறவர்களுக்குப் பிதா அருளிய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. நாம் இயேசுவோடும் அவர் நம்மோடும் இணைந்து காணப்படுகிற வாழ்வு வாழ்கிறவர்களுக்கு எல்லாவற்றையும் பிதா அருளிச்செய்வார். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் தேவைகளை அவர் சந்திப்பார். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்  பரத்திலிருந்துண்டாகி,     சோதிகளின்  பிதாவினிடத்திலிருந்து  இறங்கிவருகிறது,     அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்று யாக். 1:17 கூறுகிறது. அவரே எல்லா நன்மைக்கும் ஊற்றுக் காரணர். அதுபோல உங்கள் குடும்ப வாழ்க்கையின் தேவைகளைச் சந்திப்பார். உங்கள் கூடாரத்தின் எல்லைகள் விசாலமாகும் படிக்குச் செய்வார். உன்னதங்களுக்குரிய,     சரீரத்திற்குரிய,     பூமிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும் அளவில்லாமல் அருளிச் செய்வார்.  இஸ்ரவேல் சபை வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில்  அவர்களுக்குத் தேவதூதர்களின் உணவாகிய தேனிட்ட பணியாரம் போன்ற மன்னாவைக் கொடுத்தார்,     கன்மலையைப்  பிளந்து  தண்ணீரைச் வரச்செய்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்,     காடைகளைக் கொடுத்தர்,     அவர்களின் வஸ்திரங்கள் பழையதாய் போகவில்லை,     பாதரட்சைகள் தேய்ந்து போகவில்லை,     அவர்களில் பலவீனப்பட்டவன் ஒருவரும் காணப்படாதபடி காத்துக் கொண்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் இயேசுவோடு கூட காணப்படுங்கள்,     அப்போது மற்ற எல்லாவற்றையும் பரமபிதா உங்களுக்கு அருளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae