நன்மைக்கு ஞானிகளும்,     தீமைக்கு பேதைகளுமாயிருங்கள் (Be wise to good and innocent to evil).

உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன், ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்(ரோமர் 16:19).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/jkOmoC5jFxY

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியிலுள்ள தேவப் பிரியர்களுக்கும்,     பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதும் போது அவர்களுடைய கீழ்ப்படிதலைக் குறித்து சந்தோஷப்பட்டு,     அவர்களுக்கு ஆலோசனையாக நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினான். கர்த்தருடைய ஜனங்களாகிய நீங்களும் இப்படிப்பட்டவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் பகுத்தறிந்து ஜீவிப்பது தான் ஜெயஜீவியம் செய்யும் வழியாகும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகம் நன்மைகளினாலும் தீமைகளினாலும் நிறைந்திருக்கிறது. இந்நாட்களில் காணப்படுகிற நவீன தொழில் நுட்பங்களிலும்  நன்மைகளும் தீமைகளும்   காணப்படுகிறது. நாம் படிக்கிற பள்ளிக் கல்லூரிகளிலும்,     வேலைபார்க்கிற இடங்களிலும் நன்மைகளும் தீமைகளும் காணப்படுகிறது. நாம் எதைத் தெரிந்தெடுக்கிறோம் என்பது தான் முக்கியம். ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாளுக்கு முன்பும் ஜீவ விருட்சத்தின் கனியும் நன்மைதீமையறித்தக்க விருட்சத்தின் கனியும் காணப்பட்டது. அவர்கள் விலக்கப்பட்ட நன்மைதீமையறித்தக்க  விருட்சத்தின் கனியைத் தெரிந்தெடுத்ததின் நிமித்தம்,     தீமையைத் தெரிந்தெடுத்து,     பாவம் செய்தார்கள்;.

சாலொமோன் ராஜா,     தேவனிடத்தில் அன்பு கூர்ந்து ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். அவ்வேளையில்  கிபியோனிலே கர்த்தர் அவனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி,     நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று   சொன்னார்.  அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபை செய்து,     அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து,     இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர். இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே,     தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே,     நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.  நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திராளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.  ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும்,     நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும்,     அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்,     ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்று ஆண்டவரை நோக்கி வேண்டுதல் செய்தான். அவன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்ததாய் காணப்பட்டது. சாலொமோனைப் போல நன்மை தீமையை வகையறுக்கிற ஞானமுள்ள இருதயத்தை ஆண்டவரிடம் கேட்டு நாமும் பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவும் புறாக்களைப் போல கபடற்றவர்க்காகவும்,     சர்ப்பங்களைப் போல வினாவுடையவர்களாகவும் காணப்படுங்கள் என்றார். கர்த்தர் தன்னுடைய ஜனங்களைக் குறித்து கூறும் போது,     பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள்,     நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள் (எரே. 4:22) என்று கூறினார். நாம் அப்படிப்பட்டவர்களாய் காணப்படக் கூடாது. கர்த்தருடைய பிள்ளைகள் தீமைகள் செய்வதற்குப் பேதைகளாய் காணப்படவேண்டுமே ஒழிய,     பேதையாய் காணப்பட்டு மற்றவர்களுடைய வஞ்சகக் கண்ணிகளில் அகப்பட்டு விடாதிருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae