சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் (ஆகாய் 2:23).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/FnIW6kZmM10
கர்த்தர் செருபாபேல் என்ற தன்னுடைய ஊழியக்காரனைப் பார்த்து உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று வாக்குக்கொடுக்கிறார். முத்திரை மோதிரம் என்பது தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும். பார்வோன் தன்னுடைய முத்திரை மோதிரத்தை யோசேப்பிற்கு அணிவித்து, தன் அதிகாரங்களையும், எகிப்தை தனக்கு அடுத்த இடத்திலிருந்து ஆளுகை செய்யும் அதிகாரத்தையும் அவனிடம் ஒப்படைத்தான் (ஆதி. 41:42). கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார், நான் உங்களை என்னுடைய முத்திரை மோதிரமாக வைப்பேன். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுள்ள தேவன், தன்னுடைய அதிகாரத்தைக் கூட நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஆண்டவர் சொன்னார், என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற காரியங்களையும் செய்வான், இதைக் காட்டிலும் பெரிய காரியங்களையும் செய்வான். ஆகையால், கர்த்தருடைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிற நீங்கள் அதைச் செயல்படுத்துகிற பாத்திரங்களாய் காணப்படுங்கள், பாதாளத்தின் வல்லமைகளை இயேசு என்னும் நாமத்தில் முறியடித்து முன்னேறிச் செல்லுங்கள்.
கர்த்தர் தன்னுடைய முத்திரை மோதிரத்தை இதற்குமுன்பு யூதாவின் ராஜாவிற்குக் கொடுத்திருந்தார். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா(யோயாக்கீன்), என் வலது கையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 22:24). காரணம், கோனியா(யோயாக்கீன்) என்ற ராஜா கர்த்தரை விட்டு விலகி சோரம்போனான். எரேமியா தீர்க்கதரிசி பலமுறை தேவனுடைய எச்சரிப்பின் வார்த்தைகளைக் கூறியும் யூதாவில் கடைசியாய் தோன்றின சில ராஜாக்கள் செவிசாய்க்காமல் போனார்கள். ஆகையால் கோனியா(யோயாக்கீன்) என்பவன் மூன்று மாதங்கள் ஆட்சி செய்த பின்பு அவனைக் கர்த்தர் கழற்றி எறிந்துபோட்டார். அவனுக்குக் கொடுத்த முத்திரை மோதிரத்தை எடுத்து பின்பு செருபாபேலுக்கு கொடுத்தார். அதின் பின்பு செருபாபேலினிடத்திலிருந்து அவர் முத்திரை மோதிரத்தை எடுத்துப்போடவில்லை.
கர்த்தர் செருபாபேலுக்கு முத்திரை மோதிரத்தைக் கொடுத்துக் கனப்படுத்தினதின் காரணமென்ன? கோரேஸ் ராஜா, இடிக்கப்பட்ட இஸ்ரவேலின் ஆலயத்தைத் திரும்ப எடுத்துக்கட்ட கடந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் யார் என்று தன் பெர்சிய சாம்ராஜ்யத்தின் கீழ்க்காணப்பட்ட யூதர்களிடம் கேட்டவுடன், செருபாபேல் அந்த பொறுப்பை தன்மேல் எடுத்துக்கொண்டார். சுமார் 900 மைல்கள் கடினமான பிரயாணம் செய்து எருசலேமுக்கு கடந்துசெல்லத் தீர்மானித்தான். கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காகக் கடினமான காரியங்களைச் செய்ய நீங்கள் பிரயாசப்படும் போது, கர்த்தர் உங்களை அவருடைய முத்திரை மோதிரமாக வைப்பார். அதுபோல செருபாபேலின் கரங்களில் காணப்பட்ட தூக்குநூலைக் கர்த்தருடைய கண்கள் சந்தோஷத்தோடு பார்த்தது, என்றும் வேதம் கூறுகிறது. தூக்குநூல் கட்டிடவேலை செய்கிறவர்கள் சுவர்கள் நேராகக் காணப்படுவதை உறுதி செய்வதற்குப் பயன்படுத்துகிற ஒரு சிறிய கருவி. தேவனுடைய ஆலயவேலையை உத்தமாகவும், உண்மையாகவும் செய்ய செருபாபேல் பிரயாசப்பட்டதை, சந்தோஷத்தோடு பார்த்த கர்த்தருடைய கண்கள், அவனைத் தன்னுடைய முத்திரை மோதிரமாக்கினார். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்காகச் செய்கிற காரியங்களை உத்தமமாகவும், நேர்த்தியாகவும், உண்மையாகவும் செய்யுங்கள். அப்போது கர்த்தர் உங்களை முத்திரை மோதிரமாக வைப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org