மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும் படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக (1 இரா. 2:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mwxYxFGWAbQ
தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்ன வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள் என்பதாய் காணப்படுகிறது. கர்த்தர் தாவீதுக்கு கொடுத்த மேன்மையான வாக்குத் தத்தம் தாவீதின் சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைநிற்கும் என்பதும், அவனுடைய கற்பப்பிறப்புகளில் ஒருவன் எப்பொழுதும் ராஜாவாகக் காணப்படுவான் என்பதுமாகும். அந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலின் வரிசையில் சாலொமோன் முதல்முதலாக ராஜாவானான். ஆகையால் அவன் கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொண்டு, கீழ்ப்படிந்து கர்த்தருடைய வழிகளில் நடக்கவேண்டும் என்று தாவீது கட்டளையிட்டான். துவக்கத்தில் நன்கு துவங்கின சாலொமோன், கடைசியில் வழி தவறிப் போய், காத்தருடைய காவலைக் காப்பதில் தோற்றுப் போனான். தாவீதின் ராஜாங்கம் பிரிவதற்கும், இஸ்ரவேலில் விக்கிரக ஆராதனை வருவதற்கும் காரணமாகிவிட்டான்.
ஆசாரியர்களும், லேவியருமான ஆரோனுடைய குமாரர்களும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், பலிபீடத்தின் காவலையும் காக்கவேண்டும் என்பது கர்த்தர் கொடுத்த கட்டளையாகக் காணப்படுகிறது. கர்த்தரைக் காவல் காக்க வேண்டும் என்று அல்ல, கர்த்தருடைய காரியங்களைப் பரிசுத்தத்தோடும் பயபக்தியோடும் செய்யவேண்டும் என்பதாகும். அதுபோல ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வருகிறவர்களால் தேவச மூகம் தீட்டுப்படாமல், காத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுடைய பணியாகக் காணப்பட்டது. ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபி யூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். ஆரோனும் அவன் குமாரரும் கர்த்தருடைய காவலைப் பயத்தோடும் நடுக்கத்தோடும் செய்த வேளையில் ஆசீர்வாதமும், துணிகரமாய் கர்த்தருடைய சமூகத்தை அசட்டை செய்த வேளையில் தண்டனையையும் பெற்றுக் கொண்டார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, தன் எஜமானைக் காக்கிறவன் கனமடையவான் என்று வேதம் கூறுகிறது (நீதி. 27:18). ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் நம் எஜமானாகிய ஆண்டவருடைய காரியங்களைக் காக்கிறவர்களாய் காணப்படுங்கள். சபைகள் பரிசுத்தமாய் காணப்படுவதற்கு நாம் காவல் காக்க வேண்டும். அசுத்தங்கள் உள்ளே பிரவேசியாதபடிக்கும், உலகமும் மாமிசமும் சபைக்குள் வராதபடிக்கு நாம் வேலியாய் காணப்பட வேண்டும். பிசாசு மணவாட்டியைக் கறைப் படுத்துவதற்கு எல்லாவித ஆயுதங்களையும், வஞ்சகங்களையும் பயனபடுத்துகிற இந்நாட்களில் நாம் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், பலிபீடத்தின் காவலையும் காக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்பொழுது கர்த்தர் நம்மைக் கனப்படுத்துவார். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் பிதாவாகிய தேவன் கனம் பண்ணுவார் என்ற வார்த்தையின் படி கர்த்தருயை காவலைக் காக்கிற அத்தனை பேரையும் கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
எசேக்கியேலைப் பார்த்து கர்த்தர் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன் என்று கூறினார். சபையின் ஜனங்களைப் பாதுகாக்கிறவர்களாகவும் நாம் காணப்படவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். பட்சிக்கிற ஓநாய்களிடமிருந்தும், கர்த்தருடைய வழியை விட்டு விலகச்செய்யும் கபடர்களிடமிருந்தும், யாரை விழுங்கலாம் என்று வகை தேடிச் சுற்றித் திரிகிற பிசாசினிடத்திலிருந்தும் ஜனங்களைப் பாதுகாப்பதும் நம்முடைய கடமையாகக் காணப்படுகிறது. ஆதாமைச் சிருஷ்டித்த தேவன், அவனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். அவன் காவல் வேலையைச் சரியாய் செய்யாததினால், அவன் மனைவி ஏவாள் வஞ்சிக்கப்படக் காரணமாகி விட்டான். ஆகையால் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் காத்துக் கொள்ளுகிற மேலான பொறுப்புகளையும் கூட கர்த்தர் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களிடமும் கொடுத்திருக்கிறார் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வேலை ஸ்தலங்களில் உங்கள் எஜமான்களையும், நிறுவனங்களையும் காத்துக்கொள்ளுங்கள். அதற்குரிய கிருபைகளைக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar