சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி(Arise and thresh, O daughter of Zion).

சீயோன் குமாரத்தியே,  நீ எழுந்து போரடி, நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன், நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய். அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப்  பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய். மீகா 4:13.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rLGz_gpm_5A

மணவாட்டி சபையை வேதம் சீயோன் குமாரத்தி என்று அழைக்கிறது. கறைதிரை ஒன்றும் இல்லாத கற்புள்ள கன்னிகையாய் கிறிஸ்து என்னும் ஒரேபுருஷனுக்கு நியமிக்கப்பட்ட கர்த்தருடைய ஜனங்களை குறிக்கிறது. சீயோனின் கூட்டத்தைச் சேர்ந்த நீங்கள், எழுந்து போரடித்து சுதந்தரியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவன் மனிதனை ஆளுகை செய்யும்படியாக சிருஷ்டித்தார் என்று ஆதியாகம் 1:26 கூறுகிறது . பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். சகலவற்றையும் ஆளுகைச் செய்யும்படிக்குக் கர்த்தர் நம்மை உருவாக்கினார்.  ஆதிபெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் பாவம் செய்யும்படி செய்து,  அந்த ஆளுகையை  பிசாசு திருடிவிட்டான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று யோவான் 10:10-ல் எழுதப்பட்டபடி, பிசாசு திருடன். அவன் உங்கள் ஆரோக்கியத்தை திருடிவிடுவான், குடும்ப சமாதானத்தைத் திருடிவிடுவான், ஐசுவரியங்களைத் திருடிவிடுவான்.  ஆகையால் தான் இயேசுவைக் கூட, பிசாசு உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:  இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும், இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன் (லூக்கா 4:5,6) என்று சொன்னான்.  இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, இவற்றின் மேல் உள்ள ஆளுகை என்னிடம் காணப்படுகிறது என்று சொன்னான்.

ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை  நசுக்கும் (ஆதி. 3:15) என்று முதல் தீர்க்கதரிசன வார்த்தையின்படி, கல்வாரி சிலுவையில் சத்துருவின் தலையை நசுக்கி, அவனுடைய துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, அவனை வெளியரங்கமான கோலமாக்கி, சிலுவையில் வெற்றி சிறந்தார் (கொலோ. 2:15). சத்துரு முழுவதுமாக தோற்கடிக்கப்பட்ட இடம் கல்வாரி சிலுவை. ஆகையால், நம்பிக்கையோடு சிலுவையண்டை கடந்துவந்து, இயேசுவின் இரத்தத்தால் பாவங்களற கழுவப்பட்டு, அவருடைய பிள்ளைகளாய் மாறினவுடன், சத்துருவின் மேல் கர்த்தர் நமக்கு அதிகாரத்தைத் தருகிறார். அந்த அதிகாரத்தை பயனபடுத்தி நாம் இழந்து போன எல்லாவற்றையும், சத்துரு திருடின எல்லாவற்றையும், திருப்பிக்கொள்ளுகிற நாட்கள் இந்நாட்களாய் காணப்படுகிறது.

நீங்கள் எழுந்து போரடித்து சுதந்தரிக்கவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். தெபொராள் எழும்புமளவும், இஸ்ரவேலிலே தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின (நியா. 5:7), அதுபோல நாம் எழும்பும் மட்டும் சத்துரு கிராமங்களையும் , ஜனங்களைப் பாழாக்கிவிடுவான். எழும்பு, எழும்பு, பெலன்கொள், கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு, இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ? மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோக கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ? (ஏசாயா 51:9,10), வேதம் நம்மைக்  கர்த்தருடைய புயம் என்று அழைக்கிறது. இராகாப் என்பது எகிப்தைக் குறிக்கிறது. வலுசர்ப்பம் பார்வோனைக் குறிக்கிறது. எகிப்தியரையும் பார்வோனையும் வாதைகளினால் வதைத்ததும், செங்கடலை வற்றிபோகப் பண்ணி, அதிலே வழியை உண்டாக்கினதும் நீங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய ஜனங்கள் இன்று கர்த்தருக்காக எழும்பினால் கர்த்தர் உங்களை அவருடைய வல்லமையுள்ள புயமாக மாற்றுவர்.

எழுப்பி, போரடிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். போரடித்தல் என்பது சுதந்தரிப்பது என்பதையும் குறிக்கிறதாக காணப்படுகிறது. போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன் (ஏசாயா 41:15) என்று கர்த்தர் வாக்களிக்கிறார். எழும்பி, போரடித்து, யுத்தம் செய்து சத்துரு திருடின எல்லாவற்றையும் திருப்பிக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.  ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org