அடைக்கல பட்டணம் (City of Refuge).

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்(எண். 35:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HVb5Gpq2yUM

பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஒருவன் தற்செயலாக யாதொருவனைக்  காயப்படுத்தினாலோ,    கைப்பிசகினால் மரணத்திற்கு ஏதுவான காரியங்களைச் செய்தாலோ,    பழிவாங்குகிறவர்களுடைய  கைகளுக்குத் தப்பி ஒடி ஒளித்துக்கொள்வதற்கு ஆறு பட்டணங்களை  நியமிக்கும் படிக்குக் கர்த்தர் கட்டளையிட்டார். அவைகளில் மூன்று பட்டணங்கள் யோர்தான் நதியின் ஒரு கரையிலும்,    மற்ற மூன்று பட்டணங்கள் யோர்தான் நதியின் மறுகரையிலுள்ள கானான் தேசத்திலும் நியமிக்கும் படிக்குக் கர்த்தர் கூறினார். அவைகள்  இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமல்ல,    புறஜாதிகளுக்கும் அடைக்கலமாய் காணப்பட்டது. இவை தவறு  செய்தவர்களைப்  பாதுகாப்பதற்காய் நியமிக்கப்பட்டவையல்ல,    அப்பாவிகளையும் நல்லவர்களையும் பாதுகாக்க நியமிக்கப்பட்ட பட்டணங்களாய் அவைகள் காணப்பட்டது. 

அடைக்கல பட்டணங்கள் நல்லவர்களுக்கு அடைக்கலமாய் அந்நாட்களில் காணப்பட்டதைப் போல,    கர்த்தருடைய பிள்ளைகளாகிய  நமக்கு இயேசு   அடைக்கலமாய்க் காணப்படுகிறார். கர்த்தரின் நாமம் பலத்த துருகம்,    நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் என்று நீதி. 18:10 கூறுகிறது. நோவாவின் நாட்களில் பேழைக்குள் காணப்பட்டவர்கள் பாதுகாப்பாய் காணப்பட்டதைப் போல,    இயேசுவாகிய பேழைக்குள் காணப்படுகிறவர்களுக்கு ஆபத்து இல்லை. நோவா நூற்றியிருபது  வருஷம்  பேழைக்குள் வாருங்கள்,    வரப்போகிற அழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று பிரசங்கித்தும் எட்டு பேர் மாத்திரம் பிரவேசித்தார்கள்,     இந்நாட்களிலும் கோடிக்கணக்கான ஜனங்கள் இயேசுவின் நாமம் என்னும் அடைக்கலத்திற்குள் வர விருப்பமில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டு நீதிமான்களாய் காணப்படுகிற அவருடைய பிள்ளைகள்,    அவருக்குள் தங்களை மறைத்துக் கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் காணப்பட்ட வேளையில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் சங்காரத்தூதனுக்கு அவர்களை விலக்கிப் பாதுகாத்ததைப் போல,    சிகப்புக் கயிறு ராகாபின்  குடும்பத்தைப் பாதுகாத்ததைப் போல,    இயேசுக்கிறிஸ்துவின்  இரத்தமும்,    அவருடைய நாமமும் நமக்கு அடைக்கலமாய் காணப்படுகிறது. ஒருநாளும் இந்த அடைப்பை விட்டு வெளியே சென்றுவிடாதிருங்கள். அடைப்பைப் பிடுங்குகிறவனைப்  பாம்புக் கடிக்கும் என்று பிர.10:8 கூறுகிறது. பழைய பாம்பாகிய பிசாசு யாரை விழுங்கலாம் என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்,    யாரை நயங்காட்டி,    வஞ்சித்து அடைப்பிற்கு வெளியே கொண்டு வரலாம் என்று முயல்கிறான். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் மிகுந்த ஜாக்கிரதையோடு காணப்படுங்கள். உங்களையும்,    உங்கள் குடும்பத்தையும்,    உங்கள் பிள்ளைகளையும் கிறிஸ்துவின்  அடைக்கலத்திற்குள் வைத்துப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் அடைக்கலத்திற்குள்ளே நமக்கு ஆபத்தில்லை,    அதற்கு வெளியே நமக்குப் பாதுகாப்பே இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அனுதினமும் வாழக் கர்த்தர் உங்களுக்குக் கிருபை பாராட்டுவாராக. 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae