கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார்(The Lord will fulfill his purpose for you):-

சங் 138:8. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KdVRDVTqUUY

சங்கீதக்காரனாகிய தாவீது துன்பத்தின் பாதையில் செல்லும்போதும், அவனுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பினபோதும் விசுவாசத்துடன் சொல்லுகிறார் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் என்பதாக. இப்படித்தான் ஒருவேளை நீங்கள் துன்பத்தின் பாதையில் செல்லலாம்; அநேக சத்துருக்கள் உங்களை நெருக்கி ஏவலாம். ஆனால் ஒன்று கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார் என்பதை கர்த்தருடைய ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்து கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பார்ப்பீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மா இருப்பீர்கள்.

யோபு பக்தனும் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் விசுவாசத்துடன் சொல்லுகிறார் தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது ஒருநாளும் தடைபடாது என்பதாக. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் நடந்து வரும்போது எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்ட சூழ்நிலை வந்தது. அந்த சூழ்நிலையிலும் கர்த்தர் செங்கடலை இரண்டாக பிளந்து அவர்களை நடத்தினார். சாப்பிடுவதற்கு வானத்து மன்னாவையும் இறைச்சியையும் கொடுத்து அவர்களை போஷித்தார். வனாந்திரத்தில் நாற்பது வருஷம் கர்த்தர் நடத்தினார். நாற்பது வருஷமாக அவர்கள் உடுத்தியிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவில்லை. நாற்பது வருஷம் அவர்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. என்ன ஆச்சரியம் பாருங்கள். நாம் உடுத்தியிருந்த ஆடைகளை தினமும் போட்டால் குறிப்பிட்ட நாளில் பழையதாக போய்விடும். காலில் போடும் செருப்பு நிறம் மாறி பழையதாக போகும். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒன்றும் பழையதாகி போகவில்லை. கர்த்தர் அற்புதமாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யாவையும் செய்து முடித்தார்.

இவ்வுலகத்தின் தகப்பன்மார்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் உதவி செய்யமுடியும். இவ்வுலகத்திலுள்ள தலைவர்கள், அரசியல்வாதிகள் குறிப்பிட்ட காரியங்களில் தான் உதவ முடியும். ஆனால் கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்வார். யாவையும் என்ற வார்த்தையில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் காரியங்களை எதுவாக இருந்தாலும் அதில் அடக்கிவிடலாம். வேலையில் உயர்வு, புதிய வேலை, தொழிலில் முன்னேற்றம், ஆத்தும அறுவடை, புதிய வாகனம், புதிய வீடு, சமாதானம், சந்தோசம், பிள்ளைகளின் எதிர்காலம், சரீர நன்மைகள், ஆவிக்குரிய நன்மைகள், சமுதாயத்தில் நல்ல பெயர் என்று எல்லாவற்றையும் அடக்கிவிடலாம். கர்த்தர் ஒருவரே எல்லாவற்றையும் செய்ய வல்லவர். நீங்கள் எதிர்பாத்திருக்கும் முடிவை உங்களுக்கு அவர் வாய்க்கப்பண்ணுவார். கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org