மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது, யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும். யோசுவா 14:11,12.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NqQ3oE0INio
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்பின் வார்த்தைகளாய் காணப்படுகிறது. மோசே என்னைக் கானானை வேவு பார்க்கும்படி நாற்பதாவது வயதில் என்னை அனுப்பின அந்நாளிலிருந்த அதேபெலன் எண்பத்தி ஐந்தாம் வயதில்கூட எனக்கு இருக்கிறது. ஆகையால் எனக்கு மலைநாட்டைத் தாரும், அதை எளிதாகச் சுதந்தரிப்பேன் என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுகிறான். கர்த்தருடைய பிள்ளைகள் உங்கள் மலைகளைச் சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். தடைகளை எதிர்கொண்டு, சத்துருக்களை அழித்து, உங்கள் ஆசீர்வாதங்களை மறுபடியும் சுதந்தரிக்கிற நாட்களில் வாழந்துகொண்டிருக்கிறோம்.
காலேப்போடு கானானை வேவுபார்க்கும்படி அனுப்பப்பட்ட பத்துபேரும் நம்மால் கூடாது, முடியாது, எதிரிகள் நம்மைக்காட்டிலும் பலவான்கள், அவர்கள் இராட்சதர்கள், அந்த தேசம் குடிகளை பட்சிக்கிற தேசம் என்று அவ்விசுவாச வார்த்தைகளை பேசின வேளையில் காலேப்பும் யோசுவாவும் மாத்திரம் எளிதாய் சுதந்தரிக்கலாம், எதிரிகள் நமக்கு இரையாவார்கள், கர்த்தர் நம்மோடு இருக்கிறார், அவர்களைக்காத்த மேகம் அவர்களை விட்டு விலகிற்று என்று கர்த்தர்பேரில் இருந்த தங்களுடைய விசுவாசத்தை அறிக்கைசெய்தார்கள். ஆகிலும் பத்துபேருடைய அவ்விசுவாச வார்த்தைகளுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செவிசாய்த்து தேவனுக்கு விரோதமாக, அவருடைய ஊழியக்காரனாகிய மோசேக்கு விரோதமாக முறுமுறுத்ததினால், நாற்பது நாட்கள் வேவுபார்த்ததற்கு இணையாக நாற்து வருடங்கள் வனாத்திரத்தில் அலைந்து திரியும்படி கர்த்தர் செய்தார். அவிசுவாசமும், நம்பிக்கையின்மையும், கர்த்தருடைய ஆசீர்வாதங்களைத் தாமதப்படுத்தும், தடைசெய்துவிடும். இயேசு அற்புதங்களைச் செய்த வேளையில் கூட என்னால் இதைச் செய்யக்கூடும் என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டு, அதன்பின்பு அற்புதங்களைச் செய்தார்.
உங்கள் மலைகளைக் கண்டுகொள்ளுங்கள். வியாதிகள் ஒருவேளை மலைபோல நமக்குமுன்பாக காணப்படலாம். வேலைஸ்தலங்களில் காணப்படுகிற மனுஷர்கள் ஒருவேளை மலைபோல உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கலாம். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மலைபோல பயமுறுத்தலாம். உங்கள் பிரச்சனைக்குரிய மலைகள் எப்படிப்பட்டவைகளாகக் காணப்பட்டாலும், அவற்றையெல்லாம் நீங்கள் ஜெயமாக மேற்கொள்வதற்காக, கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் தன் ஜீவனைக்கொடுத்து உங்களை வெற்றிசிறக்கும்படிக்கு செய்திருக்கிறார். நீங்கள் இயேசுவின் மேல் வைக்கிற கடுகு அளவு விசுவாசம் கூட, மலைபோன்ற உங்கள் பிரச்சனைகளை பெயர்ந்துபோகும்படிக்குச் செய்ய வல்லமையுள்ளது. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய், என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி உங்கள் பர்வதங்களாகக் காணப்படுகிற எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு முன்பாக சமபூமியாகும் படிக்கு கர்த்தர் செய்வார். உங்கள் மலைகளை நீங்கள் சுதந்தரிப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org