பங்கும்,     பாத்தியமும்,     பேர் விளங்க ஒன்றுமில்லை (No heritage, Right or Memorial).

அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்,     அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்,     உங்களுக்கோ வென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை,     உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன் (நெகே. 2:20).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/0a1zFEzZ2oc

நெகேமியா கர்த்தருடைய வழிகாட்டுதலின் படி எருசலேமின்  அலங்கத்தை எடுத்துக் கட்டுவதற்கு பெர்சிய தேசத்திலிருந்து  எருசலேமிற்கு வந்தான்.  அங்குக் காணப்பட்ட ஜனங்களை நோக்கி,     எருசலேம்  பாழாயிருக்கிறதையும்,     அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும்,     நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே,     நாம் இனி  நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு,     எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொன்னான்,     அப்பொழுது அவர்களும் எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,     அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளையும் தோள்களையும் கொடுத்தார்கள். அவர்கள் கூறியிருக்கக்கூடும் இந்த மதில் சுவர் இல்லாமல் இவ்வளவு நாட்கள் வாழ்ந்து விட்டோம்,     இனியும் அதின் அவசியம் இல்லை என்று புறக்கணித்திருக்கலாம். வேலை கடினமானது என்று பின்வாங்கியிருக்கலாம். எதிர்ப்புகள் அதிகமாக வரும் என்று எண்ணிச்  சோர்ந்துபோயிருக்கலாம். ஆனால் நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று சொல்லி தங்களை அந்த நல்ல வேலைக்காக அர்ப்பணித்தார்கள். இப்படிப்பட்ட நல்ல ஜனங்களைக் கர்த்தருடைய கண்கள் நோக்கிப் பார்க்கிறது. இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கிற சபையும்,     ஊழியமும் பாக்கியமுள்ளது. அவைகள் வளர்ந்து பெருகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


ஒரு கூட்ட ஜனங்கள் நெகேமியாவோடு நிற்க தங்களை ஒப்புக் கொடுத்த வேளையில்,     மறுபுறம் ஓரோனியனான  சன்பல்லாத்தும்,      அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும்,     அரபியனான  கேஷேமும் அவர்களோடு சேர்ந்த ஜனங்களும் இப்பணியை எதிர்க்கத் துவங்கினார்கள். அவர்கள் பரியாசம் பண்ணி,      நிந்தித்து,     நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணப்போகிறீர்களோ என்று பேசி மனமடிவாக்கினார்கள். தொபியா யூத ஆசாரிய வம்சத்தைச்   சேர்ந்தவன்,      சன்பலாத்தும் திருமண உறவில் (நெகே. 13:28) அவர்களோடு இணைந்தவன். இப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய பணிக்கு அதிகமான ஒத்துழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும்,     ஆனால் எதிர்த்து நின்றார்கள்.  கர்த்தருடைய உண்மையான பணிகளுக்கு விரோதமாய் சத்துரு ஒரு கூட்டத்தைச் சபைக்கு உள்ளிருந்தும்,     வெளியேயிருந்தும்  எழுப்புவது நிச்சயம். அவனுடைய தந்திரங்களை அறியாதபடி,     அவனுக்கு இடம் கொடுத்து,     அவனுக்கு ஊழியம் செய்கிறவர்களும் இந்நாட்களில் அனேகமாய் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் ஒருநாளும் இப்படிப்பட்டவர்களைப் போன்றவர்களாய் காணப்படாதிருங்கள்,     இப்படிப்பட்டவர்களோடு கூட்டுச் சேராமல் காணப்படுங்கள். நீங்கள் கட்டுகிறவர்கள் என்றும் மறுபடியும் திரும்ப எடுத்துக் கட்டுகிறவர்கள் என்றும் திறப்பானதை அடைக்கிறவர்கள் என்றும் பெயர் பெறவேண்டும் என்பது கர்த்தர் உங்களைக் குறித்துக் கொண்ட நோக்கமாயிருக்கிறது. 

எதிரிகளின் திட்டத்தை அறிந்த நெகேமியா,     அவர்களைப் பார்த்து பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்,     அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்,     உங்களுக்கோ வென்றால் எருசலேமிலே  பங்குமில்லை பாத்தியமுமில்லை,     உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லை என்பதாக அவர்களோடு கூறினான். கர்த்தருடைய பணிகள் ஒருநாளும்  தடைப்படுவதில்லை,     கர்த்தர் அதை யாரைக்  கொண்டாகிலும் நிறைவேற்றுவார். ஆனால் நம்மைக்  கர்த்தருடைய மேலான பணியில்   ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருக்கும் போது,     இம்மையிலும் மறுமையிலும்,      நம்முயை பங்கையும்,     பாத்தியத்தையும் இழந்து போய்விடுவோம்,     நம்முடைய பெயர் விளங்க ஒன்றும் காணப்படுகிறதுமில்லை. ஆகையால் கர்த்தருடைய காரியங்களில் உங்களை உற்சாகமாக இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதப்படும்,     பூமியிலும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae