முட்செடிக்கு பதிலாக (Instead of the Thorn)

முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும், அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும்,     நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும் (ஏசாயா 55:13).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/BuYBbQ1tRHM

நம்முடைய தேவன் பதில்செய்கிறவர். உங்கள் சாம்பலைப் போன்ற துக்கங்களுக்குப் பதிலாகச் சிங்காரத்தைத் தருகிறவர்,     துயரங்களுக்குப் பதிலாக ஆனந்தத்தைத் தருகிறவர்,     ஒடுங்கிப் போன உங்கள் ஆவிகளுக்குப் பதிலாகத் துதியின் உடையைத் தருகிறவர். மேற்குறிப்பிட்ட வசனத்தில் முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும் என்றும்,     காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும் என்றும் கர்த்தர் வாக்கு கொடுக்கிறார். ஆதாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல்,     விலக்கப்பட்ட விருட்சத்தின்  கனியைப் புசித்து,     பாவம் செய்த வேளையில்,     பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் என்றும் அது உனக்கு முள்ளையும் குருக்கையும் முளைப்பிக்கும் (ஆதி. 3:17,    18) என்று கர்த்தர் சபித்தார். முட்கள் என்ன செய்யும்? அது நம்மை வேதனைப் படுத்தும். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் அவன் தன்னை   உயர்த்தாதபடிக்கு,     அவன் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது,     அது அவனைக் குட்டுகிற,     வேதனைப் படுத்துகிற சாத்தானுடைய தூதனாயிருந்தது என்று வேதம் கூறுகிறது. 

ஆகையால்,     உங்கள் சாபங்களை ஆசீர்வாதமாக  மாற்றுவதற்குக் கல்வாரிச் சிலுவையில் சாபத்தின் சின்னமாகிய முட்கிரீடத்தை இயேசு தன் சிரசில் ஏற்றுக் கொண்டார். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி,     கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,     நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்று கலா. 3:13ல் எழுதப்பட்டிருக்கிறது.  முட்செடிகளைப் போலவும் காஞ்சொறிகளை போலவும் கஷ்டங்களும்,     தரித்திரங்களும்,     வியாதிகளும்,     கண்ணீரும் காணப்படுகிறதா? நீதியாய் ஜீவித்தும் என்னுடைய வாழ்க்கையில் ஏன் இந்த வலிகளும்,     வேதனைகளும் வருகிறது என்று சிந்திக்கிறீர்களா?  சிலுவையண்டை  வந்து விடுங்கள். உங்கள் மனக்கிலேசங்களை எல்லாம் அவர் சமூகத்தில் ஊற்றி விடுங்கள். அவர் உங்கள் துக்கங்களைச் சந்தோஷமாய் மாற்றுவதற்கு வல்லமையுள்ளவர்.  உங்கள் வாழ்க்கையில் தேவதாரு விருட்சங்களையும் மிருதுச் செடிகளையும் முளைக்கும் படிக்குச் செய்வார். 

வேதத்தில் யாபேசின் ஜெபம் மேன்மையான ஜெபமாகக் காணப்படுகிறது. யாபேஸ் என்றாலே துக்கம் என்பது பொருள். அவன் தாய் அவனைத் துக்கத்தோடு பெற்றதின் நிமித்தம் யாபேஸ் என்ற பெயரை அவனுக்குப் போட்டாள். அவன் வளர்ந்த வேளையில் அனைவரும் அவனை யாபேஸ் என்றும்,     துக்கத்தின் மகன் என்று  அழைக்கும் போது அவமானத்தோடு வாழ்ந்து வந்தான்.  அவன் இருதயத்தில் மிகுந்து துக்கமும்,     வேதனையும் வந்தது. ஒரு நாள் தன் சாபத்தையும்,     சஞ்சலத்தையும் போக்க வல்லமையுள்ள  இஸ்ரவேலின்  தேவனை நோக்கி,     தேவரீர் என்னை ஆசீர்வதித்து,     என் எல்லையைப் பெரிதாக்கி,     உமது கரம் என்னோடிருந்து,     தீங்கு என்னைத்  துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்,     அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அவனுக்கு அருளினார் (1 நாளா. 4:10). அதின் பின்பு,     யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.  கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் வாழ்க்கையில் முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு  விருட்சங்களைக்  கர்த்தர் முளைப்பிக்கப் பண்ணுவார்,     காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடிகளை எழும்பும் படிக்குச் செய்வார். அப்போது நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்ட கனத்திற்குரிய,     பாத்திரங்களாய் மாறுவீர்கள். அது உங்களுக்கு மாத்திரமல்ல,     கர்த்தருக்கும் கீர்த்தியாகவும்,     நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்,     நீங்கள் ஆசீர்வாதமாகக் காணப்படும் போது கர்த்தருடைய நாமம் மகிமைபபடும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar