என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி. 4:19).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/rtoGVj3CkWk
பிலிப்பிய சபை மக்களை, அப்போஸ்தலனாகிய பவுல் ஆசீர்வதித்துக் கூறின வார்த்தையாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனம் காணப்படுகிறது. இந்த நிருபத்தை ரோமாபுரியில் காவலில் காணப்பட்ட வேளையில் பவுல் எழுதினார். அவருடைய ஊழியத்தின் பாதையில் அதிகமாக அவரை விசாரித்து, உதவி செய்தவர்கள் பிலிப்பிய சபை மக்கள். இப்போது சிறையில் காணப்பட்ட வேளையிலும் எப்பாப்பிரோதீத்துவின் மூலம் உதவிகளை அனுப்பினார்கள், அதின் நிமித்தம் பவுல் கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டார். தன்னுடைய குறைச்சலினிமித்தம் அல்ல, எந்த நிலையிலும் மனரம்மியமாக இருக்க கற்றுக் கொண்டவர் அவர். தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் கர்த்தரால் போதிக்கப்பட்டவர்;. ஆகிலும் அவருடைய உபத்திரவத்தின் நாட்களில் அவருடைய குறைச்சலை நீக்கும் படிக்கு மீண்டும் உதவி செய்ததை நன்றியோடு நினைவு கூருகிறார். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது, உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும், தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்ட படியினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். அவர்களால் அனுப்பப்பட்ட உதவியை, பழைய ஏற்பாட்டின் நாட்களில் பலி செலுத்தி தேவனைத் தொழுது கொள்ளுவதற்கு ஒப்பிட்டு, கர்த்தருக்கு உகந்த சுகந்த வாசனையான பலியாய் பெற்றுக் கொண்டேன் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார். அவனுக்கு அனுப்பப்பட்ட உதவி தேவனுக்கு முன்பாக சுகந்த வாசனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.
பிலிப்பிய சபை மக்களாகிய நீங்கள் எனக்கு உதவினீர்கள், ஆகையால் என் தேவன், உங்கள் எல்லா தேவைகளையும் சந்தித்து, உங்கள் குறைவுகளை எல்லாம் நீக்கி, தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி, உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் என்று மனதார ஆசீர்வதித்தார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும் போது தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின் படி ஆசீர்வதிக்கிறவர், ஆகையால் எல்லா குறைவுகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். கனம் பொருந்திய சுனேம் ஊராளாகிய ஸ்திரீ எலிசா தீர்க்கதரிசியைப் பரிசுத்தவானாய் கண்டு, அவருடைய பிரயாணங்களில் தன்னுடைய வீட்டில் வந்து தங்கிச் செல்வதற்கு, மெத்தையின்மேல் சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைத்தாள். ஆகையால் கர்த்தர் கர்ப்பத்தின் கனியைக் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார். பின்னாட்களில் பாலகன் மரித்த வேளையில் மீண்டும் அவனை உயிரோடு திரும்பப் பெற்றுக் கொண்டாள். அதன்பின்பும், ஏழு வருஷ பஞ்ச நாட்களுக்குப் பின்;, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்ப வந்த பின்பு, தன் வீட்டையும் தன் வயலையும் திரும்பவும் ராஜாவினிடத்திலிருநது பெற்றுக்கொண்டாள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அவருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும், அதோடு அவர் வேதனையைக் கூட்டுவதில்லை. நம்முடைய ஆத்துமா வாழ்வதைப் போல, நாம் எல்லாவிதங்களிலும் வாழ்ந்து ஆசீர்வாதமாகக் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் பரிசுத்தவான்களுடைய குறைச்சலில் அவர்களுக்கு உதவி செய்யும் போது, அவர்கள் உங்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதித்து ஜெபிக்கும் போது, தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவுகளை எல்லாம் நீக்கி, உங்களைத் திருப்தியாக ஆசீர்வதித்து வாழ்ந்திருக்கும் படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar