கிருபா பாத்திரங்கள் (Vessels of mercy).

தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள்மேல்  தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப்  பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? (ரோமர் 9:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8RXLutnsdDA

கிருபா பாத்திரங்கள் என்பது தேவனால் முன்னறிந்து  தெரிந்துகொள்ளப்பட்ட, தேவ தயவு பெற்ற கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. தகுதியில்லாதவர்களுக்குத் தேவன் பாராட்டுகிற ஈவுதான் கிருபையாய் காணப்படுகிறது. பூமியில் கோடிக்கணக்கான ஜனங்கள் காணப்பட்டும் கர்த்தர் நம்மை அவருடைய பிள்ளைகளாய் தெரிந்தெடுப்பதற்கு நாம் செய்த புண்ணியம் என்ன என்றால் ஒன்றுமில்லை. நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று ஆதி. 6:8 கூறுகிறது. அவர் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி தகுதிபெற்றாரே ஒழிய அவருடைய சுய கிரியைகளினால் அல்ல. மரியாள் தேவனிடத்தில் கிருபை பெற்றவளாய் காணப்பட்டாள். யூதேயாவில்  அவளைப்  போலத் திரளான கன்னிகைகள் காணப்பட்டிருந்தும், அவள் கர்த்தருடைய கண்களில் கடாட்சம் பெற்றாள். 

கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்மை அவருடைய பங்காகத்  தெரிந்தெடுத்ததே அவருடைய கிருபையும் தயவுமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய கிருபை உங்களை உயர்த்தும், வாழவைக்கும். அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபைளிக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாழ்மையோடு இயேசுவின் சிந்தையை அணிந்து ஜீவியுங்கள், அப்போது கிருபை உங்கள் வாழ்வில் பெருகும். பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப்  போக்கடிக்கிறார்கள் என்று யோனா தீர்க்கதரிசி கூறினார். ஒருநாளும் கிருபையை போக்கடிக்கிற பாத்திரங்களாய் நீங்கள் காணப்படலாகாது, கிருபையைக் காத்துக் கொள்ளுகிற கிருபா பாத்திரங்களாய் காணப்பட வேண்டும். ஈசாவிற்கு எட்டு குமாரர்கள் காணப்பட்டிருந்தும், ஏழு பேரை தள்ளி, எட்டாவது குமாரனாகிய தாவீதை கர்த்தர் ராஜாவாகத் தெரிந்தெடுத்தார். தாவீது அந்த கிருபையின் மேன்மையைக் காத்துக் கொண்ட விலையேறப் பெற்ற கனத்திற்குரிய  பாத்திரமாகக்  காணப்பட்டான். ஆனால் அவன் குமாரனாகிய  சாலொமோனை, அம்னோன் தாவீதின் மூத்த குமாரனாகக் காணப்பட்டிருந்தும்,  கிருபையாய் கர்த்தர்   ராஜாவாகத் தெரிந்து கொண்டார். அவனோ கிருபையை போக்கடித்த  கனவீன  பாத்திரமாகக் கடைசியில் மாறிவிட்டான். குயவன்  மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் உண்டு. ஆகையால் கனமான பாத்திரமாக நம்மை வனைந்த பரம குயவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாய் காணப்படுங்கள். கர்த்தர் கிருபையாய் கொடுத்த கல்வி, வேலை, குடும்பம், ஆஸ்தி ஐசுவரியங்கள், ஊழியம் எல்லாவற்றையும் நன்றியோடு காத்துக் கொள்ளுகிற கிருபா பாத்திரங்களாய் காணப்படுங்கள். 


இந்த புதிய மாதத்தில் கர்த்தர் அவருடைய கிருபையையும் தயையையும் உங்கள் ஒவ்வொருவருடைய சிரசின் மேலும் அதிகமாய் ஊற்றுவார். முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேலும் இறங்கினது போல உங்கள் ஒவ்வொருவருடைய சிரசின் மேலும் தேவ தயவு இறங்கி வரும்.  அடைபட்டுப் போன வாசல்கள்  உங்களுக்காகத் திறக்கும். ஊழியங்களில் திறந்த வாசலை இயேசு தருவார். நீங்கள் கர்த்தருடைய கிருபையைப் பெற்ற கிருபா பாத்திரங்களாய் காணப்படுவீர்கள். உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae