கிறிஸ்துவின் சிந்தையை தரியுங்கள்(Put on the mind of Christ).

கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது (1 கொரி. 2:16).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FgIi3DLjeFA

அப்போஸ்தலனாகிய பவுல் கொரித்து சபைக்கு எழுதும் போது, கிறிஸ்துவின் அப்போஸ்தலராகிய எங்களுக்கு கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. அதுபோல, இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி. 2:5) என்று நமக்கும் ஆலோசனை கூறுவதைப் பார்க்கமுடிகிறது.

கிறிஸ்துவின் சிந்தையை தரிப்பது என்றால் என்ன? ஆண்டவர் சிந்திப்பது போல நாமும் சிந்திப்பது, ஆண்டவர் ஒரு காரியத்தைப் பார்ப்பது போல நாமும் பார்ப்பது. நம்முடைய எண்ணங்கள், விருப்பங்கள், நினைவுகளை கிறிஸ்துவுக்காக இழந்து அவருடைய சிந்தையால் எண்ணங்களால் நம்மை நிரப்புவதாய் காணப்படுகிறது.

இயேசு இந்த  பூமியில் காணப்பட்ட வேளையில் பிதாவின் சிந்தையை அணிந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவராகக்  காணப்பட்டார். அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி. 2: 6-8). இயேசு பிதாவுக்குச் சமமாயிருந்தும், தன்னை வெறுமையாக்கி, மனுஷ சாயலாகி, கீழ்ப்படிந்து தன்னை தாழ்த்தினார். ஆதலால் பிதாவாகிய தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். இருவருக்குள்ளும் காணப்பட்ட ஏகசிந்தையை, ஒருமைப்பாட்டைப் பார்க்கமுடிகிறது. அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளும்  ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்கயாய்,இசைந்த ஆத்துமாக்களாய் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. இப்படிக் காணப்படுவதுதான், கிறிஸ்துவின் சிந்தையை தரித்த வாழ்க்கை.

கிறிஸ்தவம் என்பது மதமல்ல, அது ஒரு மார்க்கம், வழியாகக் காணப்படுகிறது. இயேசு சொன்னார், நானே வழி. அவருடைய பாதச்சுவடுகளை பின்பற்றி, அவருடைய சிந்தையைத் தரித்து, அவரை பிரதிபலித்து, சாட்சியாய் ஜீவிக்கக் கர்த்தர் நம்மை அழைக்கிறார். நாம் நம்மைத் தாழ்த்தி, கீழ்படிந்து ஜீவிக்கும் போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Yesuvae Ummai Pola, Uthamiyae Vol. 9