தேவனால் உண்டானவையை ஒழிக்கமுடியாது (If it is of God, It will not be overthrown).

தேவனால் உண்டாயிருந்ததேயானால்,     அதை ஒழித்துவிட உங்களால் கூடாது,     தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான் (அப். 5:39).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8eoOEHKgvxk

கமாலியேல் சகல யூத ஜனங்களாலும் கனம் பெற்ற நியாய சாஸ்திரியாய் காணப்பட்டவன். யூதர்களுடைய ஆலோசனை சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தான். ஆதி சபையின் நாட்களில் அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தின் நிமித்தம் திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிக மதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.  அவர்களைச் சிறையில் அடைப்பதும்,     உபத்திரவப் படுத்துவதும்,     ஆலோசனை சங்கத்தில் நிறுத்துவதுமாய் ஆசாரியர்கள் காணப்பட்டார்கள். அப்போது கமாலியேல் அவர்கள் நடுவில் நின்று இரண்டு பேரைக்குறித்து  அவர்களுக்கு சொன்னான்,     ஒருவன் தெயுதாஸ் என்பவன்,     மற்றவன் யூதாஸ்  என்பவன். இவர்கள் யூதர்களுக்கு முன்பாக தங்களைப் பெரியவர்களாய் காட்டி,     ஒரு கூட்ட ஜனங்கள் தங்களைப் பின்பற்றும் படிக்குச் செய்தார்கள். ஆனால் எல்லாரைப் போல அவர்களும்  மரித்துப்போனார்கள்,      அவர்களைப் பின்பற்றினவர்கள் சிதறடிக்கப்பட்டுக் காணாமல் போனார்கள் என்று கூறினான். இப்படி மனுஷனால் உண்டாகிற காரியங்கள் அழிந்து போய்விடும்,     தேவனால் உண்டானவைகள்  மாத்திரம் நிலைநிற்கும், ஆகையால் தேவனோடு போர் செய்யாதிருங்கள் என்று ஆலோசனைக் கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே,     மனுஷர்கள் தங்களைப் பெரியவர்களாய் காட்டி,     கட்டி எழுப்புகிற எந்தக் காரியங்களும் நிலைநிற்காது. தங்களுக்குப்  பேர் உண்டாகும் படிக்குக் கட்டின பாபேல் கோபுரம் நிலைநிற்கவில்லை,     என்னுடைய மகிமைப் பிரதாபத்திற்கு என்று நான் கட்டின மகா பாபிலோன் என்று நேபுகாத் நேச்சார் கூறினான்,     அதுவும் நிலைநிற்கவில்லை. நம்முடைய பெயர் பிரஸ்தாபத்திற்கு என்று நாம் செய்கிற எந்தக் காரியங்களும்,     கட்டி எழுப்புகிற எதுவும் நிலைநிற்பதில்லை. தேவனிடத்திலிருந்து வருகிறவைகள் மாத்திரம் என்றும் நிலைத்திருக்கும்.


கர்த்தருடைய ஜனங்கள் அறிந்தும் அறியாமலும் தேவனோடு போர் செய்கிற வேளைகள் அனேகம் காணப்படுகிறது. சவுல் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்,     ஆனால் இயேசு,     அவனை தன்னோடு போர்செய்கிறவனாய் பார்த்தார்,     ஆகையால் முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்று எச்சரித்தார். சில வேளைகளில் தேவனால் உண்டானவைகளாகிய  உத்தமமான ஊழியங்களுக்கு விரோதமாய்,     சபைகளுக்கு விரோதமாய் நாம் போர்செய்கிறோம்,     சபையின் ஒருமைப்பாட்டை வார்த்தைகள்,     செய்கைகள் மூலம் கெடுக்கிறவர்களாய் காணப்படுகிறோம். விசுவாசத்தில் பலவீனமானவர்களுக்கு விரோதமாகவும்,     சாதாரண ஜனங்களுக்கு விரோதமாகவும் இடறல்களை உண்டாக்குகிறவர்களாய் காணப்படுகிறோம். இவற்றையெல்லாம் தனக்கு விரோதமாய்  போர்செய்வதாகவே ஆண்டவர் பார்க்கிறார். இயேசு சொன்னார்,     என்னோடு இராதவன் எனக்கு விரோதி என்று. நாம் இயேசுவோடும்,     இயேசுவுக்காகவும் காணப்பட வேண்டும்,     இல்லையேல் அவருடைய விரோதியாகிய பிசாசோடு சேர்ந்து,     தேவனால்  உண்டானவற்றை எதிர்க்கிறவர்களாய் காணப்பட்டுவிடுவோம். ஆகையால் ஆண்டவருக்கு விரோதமாய் போர்செயயாமல்,     உங்களை முழுமையுமாய் அவருக்கு அர்ப்பணித்து வாழ்ந்து,     ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae