தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் (You willl eat the best of the land).

நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால்,      தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் (ஏசாயா. 1:19).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oZg0Ocxbogg

கர்த்தர் யூதாவின் ஜனங்களைப் பார்த்துக் கூறுகிறார்,        நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால்,      தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் என்பதாக. மனம் பொருந்துதல் என்பது இருதயத்தின்  நிலையைக் குறிக்கிறது. செவிகொடுத்தல் என்பது அப்படிப்பட்ட இருதயத்திலிருந்து  உண்டாகும் கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. கர்த்தரோடு உள்மனம் சீர் பொருந்தியிருந்தால்,      அது கீழ்ப்படிதலாய் வெளிப்படும். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாய் காணப்படுகிற கர்த்தருடைய பிள்ளைகளே,      உங்கள் இருதயம் கர்த்தரோடு இசைந்திருக்கும் போது,      நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் உள்ள ஜீவியம் செய்வீர்கள்;. கர்த்தருடைய பார்வையில்  பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும்,      ஆட்டுக்கடாக்களின்  நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். சவுலின் கீழ்படியாமையினிமித்தம் அவன் ராஜ்யபாரத்தை இழந்தான்,      தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் கீழ்ப்படிதலுள்ள  ஜீவியம் செய்ததினால் அவனுக்கு நிலையான வீட்டையும்,      சிங்காசனத்தையும் தேவன் கொடுத்தார். இயேசு,      சிலுவையில் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார் என்று வேதம் கூறுகிறது. அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நம்மிடமும் அதேக் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். 

நீங்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் காணப்படும் போது,      தேசத்தின்  நன்மையைப் புசிப்பீர்கள். தேசங்களின் சூழ்நிலைகள் எதுவாய்  காணப்பட்டாலும்,      பஞ்சங்கள் காணப்பட்டாலும்,      ஸ்திரத்தன்மையற்ற  நிலை காணப்பட்டாலும்,      யுத்தங்களும் உள்நாட்டுக் குழப்பங்களும் காணப்பட்டாலும் நீங்கள் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். கானான் தேசத்தை  வேவுபார்க்கச் சென்றவர்களில் பத்து பேர் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு கீழ்ப்படியாமல் துர்செய்தியைக் கொண்டு வந்ததினால்,      பாலும் தேனும் ஓடின கானான் தேசத்தின் நன்மையைப்  புசிக்காமல் வனாந்தரத்தில் மரித்தார்கள். தேவன் நம்மோடிருக்கிறார்,      ஆகையால் எளிதாய் எதிரிகளை மேற்கொள்ளலாம் என்று சொன்ன யோசுவாவும்,      காலேபும் அவர்கள் சந்ததிகளும் கானானின் நன்மையைத் திருப்தியாய் புசித்தார்கள். ஆகையால் ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசித்திருக்கிற நீங்கள்,      ஆண்டவருக்கு  கீழ்ப்படிகிற ஜீவியம் செய்யவும்,      அவருடைய சித்தத்தின்படி வாழவும் உங்களை அர்ப்பணியுங்கள்,      அப்போது கர்த்தர் நன்மையான நல்ல ஈவுகளை உங்களுக்குத் தந்து,      உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae