அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்(எஸ்றா 1:5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nDLYeT1v_fc
ஆவியான தேவன் நம்மை ஏவுகிறவர். இயேசு, யோர்தான் நதியில் யோவான்ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறியவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் என்று மாற்கு 1:12 கூறுகிறது. சிம்சோனை கர்த்தருடைய ஆவியானவர் ஏவினார் என்று நியா.13:25ல் எழுதப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எழுபது வருட பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து எருசலேம் செல்லுவதற்கு கோரேஸ் ராஜாவினால் கட்டளை பிறந்த பின்பு, ஒரு சிறு கூட்டத்தைக் கர்த்தர் ஏவினார், ஆகையால் அவர்கள் பல மைல் தூர கடினமான பிரயாணத்தையும், கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல்; சந்தோஷத்தோடு புறப்பட்டு வந்தார்கள். ஆலயத்தையும் கட்டி முடித்தார்கள். அவர்கள் கட்டின இரண்டாவது ஆலயம் செருபாபேலின் ஆலயம் என்று பெயர் பெற்றது. கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் ஒரு சிறுகூட்டமாய் காணப்பட்டாலும் ஆவியானவரால் ஏவப்படுகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். மன உற்சாகமில்லாதவர்களாய் காணப்படுகிறவர்களை வைத்து கர்த்தருடைய காரியங்களை நடப்பிக்க முடியாது. சத்துரு ஜனங்களை சோர்வடையும்படிக்குச் செய்கிறவன். அவன் எலியாவையும், யோனா தீர்க்கதரிசியையும் கூட சோர்வடையும் படிக்குச் செய்தவன். அவன் ஜனங்களுக்குள் ஆவியானவரின் ஏவுதல் வந்து விடக்கூடாது என்பதில் நோக்கமாயிருக்கிறவன், பின்னுக்கு இழுக்கிறவன். ஆவியான தேவன் நீ முன்னேறிச் செல், இருக்கும் பலத்தோடு செல், நீ போகவேண்டிய தூரம் வெகு அதிகம் என்று சொல்லி நம்மை உற்சாகப் படுத்துகிறவர்.
ஆவியானவருடைய ஏவுதல் நமக்குள் எழுப்புதலைக் கொண்டுவரும். உணர்ச்சிகளினால் தோன்றுகிற எழப்புதல் பிரயோஜனமில்லாதது. அது நெடுநாள் நீடிப்பதில்லை. ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்ட மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்ட வேளையில், எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் என்றும், எவர்களுடைய இருதயம் எழும்பி, உற்சாகமடைந்ததோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவற்றைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள் என்றும் வேதம் கூறுகிறது. தாவீதின் நாட்களிலும் ஜனங்களுடைய இருதயம் உற்சாகமடைந்ததால் ஆலயக்கட்டுமான காரியங்களுக்காக எல்லாவற்றையும் அவன் சவதரித்து வைத்தான். இந்தக் கடைசி நாட்களில் ஆவியானவருடைய ஏவுதலும், எழுப்புதலும் சபைக்குள் காணப்பட வேண்டும், விசுவாசிகளுடைய இருதயத்தில் காணப்பட வேண்டும், அப்போது உலகளாவிய கர்த்தருடைய பணிகள் தடையின்றி நடக்கும், இயேசுவின் நாமம் மகிமைப்படும், அப்போது கர்த்தர் ஜனங்களை நினைத்தருளி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae