நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (If You Believe You Will See the Glory of God).

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார் (யோவான் 11:40).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dUDWvVmHiG4

கிறிஸ்தவ ஜீவியம் என்பது விசுவாச வாழ்க்கையாகும். நாம் தரிசித்து அல்ல விசுவாசித்து ஜீவிக்கும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள். விசுவாசமில்லாமல்   நாம் தேவனுக்குப் பிரியமாய் காணப்பட முடியாது. விசுவாசத்தினால்  வராதவை எல்லாம் பாவமாய் காணப்படுகிறது. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கைகூடிவரும்,     அப்படிப்பட்டவர்கள் காலதாமதம் ஆனாலும் தேவன் குறித்த வேளையில் அவருடைய மகிமையைக் காண்பது நிச்சயம். ஆகையால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக,     குடும்ப வாழ்க்கையின் தேவைகளுக்காக,     ஊழியத்தின் காரியங்களுக்காகத்  தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள்.

இயேசு நேசித்த லாசரு வியாதியாயிருந்தான். அந்தச் செய்தியை அவனுடைய சகோதரிகள் அவருக்குத் தெரிவிக்க ஆட்களை அனுப்பினார்கள். ஆனால் உடனே இயேசுவை வரும்படிக்குச் சொல்லவில்லை. அதற்குக் காரணம் ஆண்டவர் சமீபத்திற்கு மாத்திரமல்ல தூரத்திற்கும் தேவன். அவர் நம்முடைய விண்ணப்பங்களை எந்த இடத்திலிருந்து நாம் ஏறெடுத்தாலும் கேட்டு பதில் தருகிறவர். லாசரு வியாதிப்பட்ட செய்தியை கேட்டபின்பு இயேசு இருந்த இடத்தில் இரண்டு நாட்கள் மீண்டும் தங்கியிருந்தார். ஆகையால் லாசரு மரித்துப் போய்விட்டான். இப்போது மரித்து நான்கு நாட்களான பிறகு,     அவர் தம்முடைய சீஷர்களோடு  பெத்தானியாவிற்கு  வந்தார். இயேசு இவ்வளவு காலதாமதம் செய்ததின் நோக்கம்,     லாசருவின் மரணத்தில் தேவனுடைய நாமம் அதிகமாய் மகிமைப்பட  போகிறது என்பதற்காக. யூதர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு,     மரித்தவர்களுடைய ஆவி மூன்று நாட்கள் அடக்கம் செய்த கல்லறையின் அருகில்  அசைவாடும் என்பதாக,     ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால்,     சரீரத்தில் உட்பிரவேசிக்கலாம் என்று.  நான்காவது நாளிலிருந்து சரீரம் அழுக ஆரம்பித்து,     அவயவங்கள் கெட்டுப்போகத் துவங்கியபின்பு   ஆவி அவ்விடம் விட்டுக் கடந்து செல்லும். ஒருவேளை அவர்களுடைய இந்த நம்பிக்கையின் நிமித்தம் இயேசு காலதாமதம் செய்து நான்காவது நாள் வந்திருக்கக் கூடும். என் மேல் விசுவாசம் வைப்பவர்களுக்கு எதுவும் சாத்தியம் என்பதை வெளிப்படுத்துவதற்கும்,       தேவனின் நாமம் மகிமைப்படுவதற்கும்  ஏதுவாகவும் ஆண்டவர் நான்காவது நாள் கடந்து வந்தார். இயேசு  கல்லறையினிடத்திற்கு வந்தார்,     அது ஒரு குகையாயிருந்தது,     அதன்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.  இயேசு,     கல்லை எடுத்துப்போடுங்கள் என்று கூறி,     அது எடுக்கப்பட்ட பின்பு,     லாசருவே,     வெளியே வா என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். உடனே மரித்தவன் உயிர் பெற்று வெளியே வந்தான். தேவனுடைய மகிமையைக் கண்ட அனேகர் அவ்விடத்திலே அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்களைச் சோர்வடையச் செய்கிற காலதாமதங்களைக் குறித்து கவலைப் படாதிருங்கள். குறித்த காலத்தில் கர்த்தருடையக் கரம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். நீங்கள் இயேசுவின் மேல் வைத்திருக்கிற விசுவாசம் உங்களை ஒருநாளும்  வெட்கப்படுத்தாது. நீங்கள் தேவனுடைய மகிமையை நிச்சயமாய்க் காண்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae