வெளி 5:4,5 ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qkoAxx6gzT4
புதிய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த ஒரு பெரிய தீர்க்கதரிசி அப்போஸ்தலனாகிய யோவான். பழைய ஏற்பாடு பெரிய தீர்க்கதரிசிகளும் யோவானை போல அழுகிறவர்களாய் காணப்பட்டார்கள். ஏசாயா எரேமியா போன்றோர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தபோது மனங்கசந்து அழுதார்கள். ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன் (எரே 9:1) என்று எரேமியா தீர்க்கதரிசி சொல்லுவார்.
இங்கே யோவான் அழுவதற்கு காரணமென்ன? பிதாவின் வலது கரத்தில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புத்தகம் இருந்தது. இந்த புத்தகம் பிதாவின் வலது கரத்திலிருந்து. அப்படியென்றால் அவர் அந்த புத்தகத்தை வாங்க தகுதியாய் இருப்பவருக்கு கொடுக்க ஆயத்தமாய் இருந்தார். அந்த புத்தகம் உள்ளும் புறம்பும் எழதப்பட்டிருந்தது. அவ்வளவாய் அதிகமாய் எழுதப்பட்ட புத்தகம். அந்த புத்தகம் ஏழு முத்திரைகளினால் முத்திரைபோட பட்டிருந்தது. வங்கியில் தங்கத்தை வைத்திருக்கும் லாக்கரை திறக்க வேண்டுமென்றால் வங்கியிடம் உள்ள ஒரு சாவியும், வாடிக்கையாளர் கையிலிருக்கும் சாவியையும் வைத்து திறந்தால் தான் திறக்க முடியும். காரணம் அதற்குள்ளாக இருக்கும் தங்கம் மிகவும் விலையுயர்ந்தது. ஆகையால் லாக்கர் அறைகள் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். பிதாவின் வலதுகரத்திலிருக்கும் புத்தகம் ஒரு முத்திரையோடு பத்திரப்படுத்தவில்லை, மாறாக, ஏழு முத்திரைகளால் முத்திரைபோட பட்டிருந்தது. அப்படியென்றால் அந்த புத்தகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
அந்த புத்தகத்தை திறக்க ஒருவரும் பாத்திரவானாய் இல்லை என்பதை பார்த்த யோவான் மிகவும் அழுதார். ஏன் அழுதார்? அவர் பத்மு தீவில் கைதியாக இருப்பதனால் அழவில்லை; அவர் தன் சொந்த பந்தங்களை பிரிந்து வந்ததினால் அழவில்லை; அவருக்கு இருக்கும் வியாதி, வலியினால் அழவில்லை; தன்னுடைய பிரச்சனைக்காக, ஆசீர்வாதத்திற்காக அழவில்லை. மாறாக, அந்த புத்தகம் திறக்கப்படாவிட்டால் மனித குலத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும், கோடிக்கணக்கான ஆத்துமாக்களை பாதாளம் வாரிக்கொள்ளும் என்பதை நன்றாக அறிந்து யோவான் மிகவும் அழுதார். பழைய ஏற்பாட்டில் ஒருவன் மரித்தால் அவனுடைய நிலத்தை நெருங்கிய உறவினன் மீட்டுக்கொள்ளலாம் என்று லேவியராகம புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ரூத்தை நெருங்கிய உறவினன் ஒருவன் மீட்டுக்கொள்ளாததினால், அவளை போவாஸ் மீட்டுக்கொண்டான். நெருங்கிய உறவினன் நியாயப்பிரமணத்திற்கு அடையாளம். போவாஸ் கிறிஸ்துவிற்கு அடையாளம். நம்மை நியாயப்பிரமாணம் மீட்கவில்லை, கிறிஸ்து அவருடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார். பிரமாண புஸ்தகம், ரூத்தின் சரித்திரத்தை நன்றாக அறிந்த யோவான், இந்த புத்தகத்தை யாரும் திறக்கவில்லையென்றால், எப்படி ஜனங்கள் மீட்கப்படுவார்கள் என்று அவர் அழுதார். இப்படி யோவானுக்கு இருந்த ஆத்தும பாரம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தூதன் வந்து ஒரு நற்செய்தியை கூறுகிறார். அந்த நற்செய்தி என்னவென்றால், நீ அழவேண்டாம் என்பதே. காரணம் யூதா கோத்திரத்து சிங்கம் இந்த புஸ்தகத்தை திறக்க ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். நம்முடைய ஆண்டவர் புஸ்தகத்தை திறந்தவர், சுவிசேஷத்திற்கும் ஆத்தும இரட்சிப்பிற்கும் திறந்த வாசலை உண்டுபண்ணுகிறவர். அவர் பூட்டக்கூடாதபடி திறக்கிறவர். அதாவது, அவர் இரட்சிப்பு என்னும் கதவை திறந்தால், ஒருவராலும் அதை பூட்டமுடியாது. அவர் திறக்ககூடாதபடி பூட்டுகிறவர். அதவாது, நியாயத்தீர்ப்பிற்கென்று அவர் கதவை பூட்டினால், அதை ஒருவராலும் திறக்க முடியாது. யோவானை போல ஆத்துமாவிற்காக, மீட்பிற்காக அழுது ஜெபிக்கிறவர்களுக்கு, கர்த்தர் சொல்லுகிறார் நீ அழவேண்டாம். காரணம் அவர் திறந்த வாசலை உண்டுபண்னுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org