உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்துங்கள் (Devote your heart).

கர்த்தருடைய வேதத்தை ஆராயவும்,அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும்,
எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். எஸ்றா 7:10

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DiBBRg1xWiU

சாலொமோன் ராஜா கட்டின எருசலேம் தேவாலயம், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரால் இடித்து தள்ளப்பட்டது. அதன் பின்பு பாபிலோனிய அடிமைத்தனத்தில், காணப்பட்ட யூத ஜனங்கள், ஏரேமியா தீர்க்கதரிசியால் முன்கூறப்பட்ட எழுபதுவருஷங்கள் முடிந்த வேளையில்,  கோரேஸ் ராஜாவின் நாட்களில் செருபாபேலின் தலைமையின் கீழ் ஒருகூட்ட ஜனம் ஆலயத்தைத் திருப்பி எடுத்துக் கட்டும்படியாக கி.மு. 538-ஆம் வருஷத்தில் கடந்துவந்தார்கள். சுமார் 80 வருஷங்களுக்கு பின்பு, கி.மு. 558-ஆம் வருஷத்தில், எஸ்றாவின் தலைமையின் கீழ், நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்கும்படியாக, ஜனங்களை ஆவிக்குரிய பிரகாரம்கட்டும்படிக்கு, கடந்துவந்தார்கள். வேதத்தைக் கற்றுக்கொடுக்கும்படி வந்த எஸ்றா,  மூன்று காரியங்களைச் செய்யும்படிக்கு தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று மேற்கூறப்பட்ட வசனங்கள் சொல்லுகிறது. ஆகையால், கர்த்தருடைய தயவுள்ள கரம் அவனோடிருந்தது, அவன் காரியசித்தி உள்ளவனானான்.

முதலாவது கர்த்தருடைய வேதத்தை ஆராய்ந்து, அதைக் கற்றுக்கொள்ளுவதற்கு தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே என்று யோவான் 5:39-ல் இயேசு கூறினார். வேதவார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்பது என்பது அசைபோடுவதற்கு அடையாளம். வாசித்த வேதபகுதியை திரும்பவும் படிந்து அதிலிருக்கும் மறைபொருளை அறிந்துகொள்ளுவதாகும்.  பெரேயா பட்டணத்து ஜனங்கள் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள் (அப். 17:11). அவருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்றும் சங்கீதம் 1:2-3-ல் வாசிக்கிறோம். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் வெளி. 1:3-எழுதப்பட்டிருக்கிறது. வேதத்தை ஆராய்வதற்கு உங்கள் இருதயங்களைப் பக்குவப் படுத்திக்கொள்ளுங்கள். கர்த்தருடைய கரம் உங்களோடிருக்கும், உங்கள் வழிகள் வாய்க்கும்.

இரண்டாவது வேதவார்த்தைகளின்படி செய்ய தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். வேதத்தை வாசிப்பதோடும், ஆராய்வதோடும் நிறுத்திவிடாமல் அதைக் கைக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளின்படி செய்கிறவர்களைத் தான் வேதம் புத்தியுள்ள மனுஷன் என்று அழைக்கிறது. அவர்கள் எந்நாளும் நிலைநிற்பார்கள். நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. . நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து,  அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார் (மத்தேயு 7:24-27). அவருடைய வார்த்தையின்படி செய்கிற வாழ்வு என்றும் நிலைத்துநிற்கும். அந்த வீடும், குடும்பமும் என்றென்றைக்கும் நிலைத்துநிற்கும்.

மூன்றாவது கர்த்தருடைய வேதத்தைக் கற்றுக்கொடுப்பதற்கும் தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். நாம் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்பது இயேசுவின் கடைசி கட்டளை (Great Commision). அன்று பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியிடம், அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு:  நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்று கேட்டவேளையில்,  அவன் ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று வினவுகிறதைப் பார்க்கமுடிகிறது (அப். 8:30-31). அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? என்று ரோம. 10:14-ல் வாசிக்கிறோம். விசுவாசத்தில் தன் உத்தமகுமாரனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு (2 தீமோ. 4:2) என்று எழுதுகிறார். வேதவசனங்களை கற்று, அதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் உங்கள் இருதயங்களைப்  பக்குவப்படுத்துங்கள்.  என்றால், தேவனுடைய தயவுள்ள, நன்மைசெய்கிற கரம் எஸ்றாவுடன் இருந்ததுபோல உங்களோடும் இருக்கும். நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.  ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org