காருணியம் என்னும் கேடகம்(Shield of favour).

கர்த்தாவே,       நீர் நீதிமானை ஆசீர்வதித்து,       காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்(சங். 5:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iT5X2dez6fM

தேவன் தம்முடைய பிள்ளைகளை,       காருணியம் என்ற தயவினால் சூழ்ந்து கொள்ளுகிறவர். ஒரு கேடகம்  எதிரிகளிடத்திலிருந்து  எல்லாப்பக்கத்திலும் எப்படி நம்மைப் பாதுகாக்கிறதோ,       அதுபோல கர்த்தருடைய தயவு எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களுக்கு வெளிப்படும். முட்செடியில் எழுந்தருளின தேவனுடைய தயவு  யோசேப்பின் உச்சந்தலையில் இறங்கியதின் நிமித்தம்,       அவனுடைய வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில், அந்த தயவு அவனைக் கேடகமாய் சூழ்ந்து கொண்டு,       பாதுகாத்து,       ராஜாவின் அடுத்த இடத்தில் உயர்த்தியது. ராஜாவின் செங்கோல் எஸ்தருக்கு ராஜாத்திக்கு நீட்டப்பட்டது,       அது அவளுக்கு அவன் கண்களில் கிடைத்த தயவின் வெளிப்பாடாய்  காணப்படுகிறது,      அதினிமித்தம் யூத ஜனங்கள் பாதுகாக்கப்பட்டார்கள். அதுபோல கர்த்தருடைய தயவு உங்களை வாழ்க்கையில் வெளிப்பட்டு உங்களை உயர்த்தும்,       உங்களை வாழவைக்கும்.

யாருக்குக் கர்த்தருடைய தயவு வெளிப்படும் என்று மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் பார்க்கும் போது நீதிமான்களுக்கு வெளிப்படும் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் நீதிக்குரிய வாழ்க்கை வாழும் போது கர்த்தருடைய தயவு வெளிப்படும். தேவனுடைய பார்வைக்கு பிரியமானவற்றையும்,        செம்மையானவற்றையும் செய்து அவருடைய வார்த்தைக்குக்  கீழ்ப்படிந்து,       விசுவாச ஜீவியம் செய்யும் போது,       கர்த்தர் உங்களை நீதிமான்களாய் பார்க்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள்  தேவனுடைய நீதியாகும் படிக்கு,       பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் என்று 2 கொரி. 5:12 கூறுகிறது. நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் பாவங்களறக் கழுவப்பட்டு,       அவருடைய சிந்தையையும் சுபாவங்களையும் தரித்து,       அவரின் சாயலை வெளிப்படுத்தி ஜீவிக்கும் போது தேவன் உங்களை நீதிமான்களாய் பார்க்கிறார். வேதத்தில் நீதி என்ற வார்த்தையானது முதன்முதலில் ஆதி. 15:6ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிராம்  கர்த்தரை விசுவாசித்தான்,       அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் என்பதாக. ஒருநாள் கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு  தரிசனத்தில் வெளிப்பட்டு,       ஆபிராமே,       நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும்,       உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்று கூறினார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே,       அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல்   இருக்கிறேனே,       தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை,       இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்போது கர்த்தர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை  அண்ணாந்து பார்,       நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால்,       அவைகளை எண்ணு என்று சொல்லி,       பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான்,       அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.  ஆபிராம் வயது சென்றவனாகி விட்டான்,    அந்த வேளையில்,   நம்பமுடியாத கர்த்தருடைய வார்த்தை வெளிப்படுகிறது. ஆனால் ,      அவன் தன்னுடைய வயோதிபத்தைப் பார்க்கவில்லை. கர்த்தருடைய வார்த்தையை அப்படியே விசுவாசித்தான்,       ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்தான்.  கர்த்தருடைய பிள்ளைகளே,       கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவியுங்கள்,       பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் என்று வேதம் கூறுகிறது. கர்த்தரோடு உங்கள் உறவு செம்மையானதாய் இருக்கட்டும். உடன் மனிதர்களோடு நீங்கள் செய்கிற பரிவர்த்தனைகள் உண்மையும் செம்மையுமாய் காணட்டும். அப்போது கர்த்தர்  உங்களை நீதிமான்களாய் கண்டு,       உங்களைத் தயவினால் சூழ்ந்து கொள்ளுவார்,       நீங்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae