தேவசாயல் (Image of God).

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1 : 27 & 28)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LK0XBmoCAHE

மேன்மையான நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட மனிதன் கீழ்ப்படியாமல், கண்கள் கண்டதையெல்லாம் இச்சித்தான். மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது. அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாய் காணப்பட்டது. ஆதலால் தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார் (ஆதியாகமம் 6: 5, 6 & 7). ஆனால் அந்த நாட்களிலும் ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
மற்றும் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆகையால் கர்த்தருடைய கண்களில் அவருக்கு கிருபை கிடைத்தது. தேவசாயலை கொண்டிருந்த நோவா அழிவிலிருந்து காக்கப்பட்டார்.

உங்களுக்கும் அதே தேவசாயலை கர்த்தர் தந்திருக்கின்றார். அந்த தேவசாயல் உங்களில் காணப்படுகின்றதா ? அதை ஒவ்வொரு நாளும் தரித்துக்கொள்கின்றீர்களா ?

இந்த நாட்களிலும் எங்குப்பார்த்தாலும் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் திரளாய் நடந்துகொண்டிருக்கின்றது. அநேக ஜனங்கள் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே செய்கின்றார்கள்.

இப்படிப்பட்டதான கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருந்து, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துகொண்டு, அவருக்கு சாட்சியாய் வாழ்ந்து., உங்களை சுற்றிலும் இருக்கின்ற ஜனங்களை அவரண்டை கொண்டுவர வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.
(பிலிப்பியர் 2:15 & எபேசியர் 4:24)

எனவே உம்மைப்போல என்னை மாற்றி, உங்க சித்தத்தை என்னில் நிறைவேற்றும் என்று தேவனுடைய கரத்தில் உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sam David,G
Word of God Church
Doha Qatar
www.wogim.org