வேடனுடைய கண்ணி (Snare of the fowler).

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,    பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்(சங்.91:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oRwc2gZ1y9k

வேதத்தில் சாத்தானுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருடன்,    வஞ்சிக்கிறவன்,    அந்தகார லோகாதிபதி,    பெயல்செபூல்,    பொய்களின் பிதா,    லூசிபர்,    ஒளியின் தூதன்,    பழைய பாம்பு என்று பல பெயர்கள் காணப்படுகிறது. அவைகளில் வேடன் என்பதும் ஒன்றாய் காணப்படுகிறது. வேடனுடைய சுபாவமே,    கண்களுக்கு தெரியாதபடி,     மறைவான கண்ணிகளை வைப்பதாகும். மிருகங்களுக்கும்,    பறவைகளுக்கும்,    பலவிதமான உயிரினங்களுக்கும் கண்ணிகளை வைத்து அவைகளைப் பிடித்து,    அடித்துப் புசிப்பதும்,     விற்பதுமாகும்.  அவன்  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான கண்ணிகளை வைப்பான். அதுபோல பிசாசும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான கண்ணிகளை வைத்து,    ஆத்துமாவை அழிவுக்கு நேராக இழுத்துச் சென்று,    அடிமைப் படுத்துவான். புசிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட விருட்சத்தின் கனி,    ஆதாம் ஏவாளுக்கு கண்ணியாயிற்று,     ஏசாவுக்கு சிகப்பான கூழ் கண்ணியாயிற்று,    ஆகானுக்கு  பாபிலோனியச் சால்வை கண்ணியாயிற்று,    சிம்சோனுக்கு தெலீலாள் கண்ணியானாள்,    நாகமானுடைய  வெகுமதிகள் கேயாசிக்கு கண்ணியாயிற்று,    சவுலுக்கு அமலேக்கியர்களின் ஆடு மாடுகள் கண்ணியாயிற்று,    அந்நிய ஸ்திரீகள் சாலொமோனுக்கு கண்ணியானார்கள்,    யூதாசுக்கு முப்பது வெள்ளிக் காசு கண்ணியாயிற்று,    தேமாவிற்கு உலக ஆசைகள் கண்ணியாயிற்று. கிதியோனின் ஏபோத்து அவன் வீட்டாருக்கும்,    பிள்ளைகளுக்கும் கண்ணியாயிற்று. வேதத்தில் இப்படிப்பட்ட அனேக கண்ணிகளைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.  


கர்த்தருடைய பிள்ளைகளே,    வேடன் கண்ணிகளை உங்களுக்கு எதிராக விரித்துக் கொண்டு காணப்படுவான்,    அது அவனுடைய வேலை. ஆனால் கர்த்தரோடு நீங்கள் காணப்படும் போது,    அவர் உங்களை வேடனுடைய எல்லாக் கண்ணிகளுக்கும் விலக்கிக் காப்பார். பண ஆசை,    மேட்டிமையான வார்த்தைகளைப் பேசுவது,    நான் என்ற எண்ணம்,    திறமைகளின் மேல் நம்பிக்கை வைப்பது,    கெட்ட பழக்க வழக்கங்கள் என்ற பல கண்ணிகளுக்குள் நீங்கள் ஒருவேளை சிக்கித் தவிக்கலாம். பிசாசு உங்களை நயங்காட்டி,    மயக்கி உங்களைப் பலவிதமான வலைகளுக்குள் சிக்க வைத்திருக்கலாம். கர்த்தர் உங்களை எல்லாக் கண்ணிகளிலிருந்தும் தப்புவிப்பார். போத்திபாரின் மனைவியின் கண்ணியிலிருந்து யோசேப்பை தப்புவித்தது போல,    பாபிலோனிய ராஜாவின் போஜனத்திலிருந்தும் பானத்திலிருந்தும் தானியேலையும் அவன் நண்பர்களையும் தப்புவித்தது போல,    பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும்,    கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்ட வேளையில் இயேசு அவர்கள் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு வேண்டுதல் செய்து அவர்களை தப்புவித்தது போல,    கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் தப்புவிப்பார். ஆண்டவர் கற்றுக் கொடுத்த பரமண்டல ஜெபத்தில் எங்களைச் சோதனைகளுக்குள் பிரவேசிக்காதபடிக்கு தீமைக்கு விலக்கிக் காத்தருளும் என்ற ஜெபத்தின்படி,    ஒவ்வொரு நாளும் வேடனின் மறைவான கண்ணிகளுக்கு  என்னை விலக்கிக் காத்தருளும் என்று ஜெபியுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae