நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங். 119:71).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NNCD09cHSiI
உபத்திரவங்களை யாரும் விரும்புவதேயில்லை. உபத்திரவங்கள் ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், தேசத்தின் குடிகளுக்குள்ளும் வேதனையும் கஷ்டங்களையும் கொண்டு வரும். சில வேளைகளில் உபத்திரவங்கள் பாவத்தின் விளைவுகளாய் காணப்படலாம், சில வேளைகளில் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளாய் கூட காணப்படலாம், சில வேளைகளில் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உபத்திரவங்கள் ஏற்படலாம், சில வேளைகளில் உபத்திரவங்கள் யோபுவின் வாழ்க்கையைப் போலத் தேவ திட்டத்தின் ஒரு பகுதியாய் கூட காணப்படலாம், சில வேளைகளில் சாத்தானுடைய தாக்குதலாய் கூட இருக்கலாம், பேதுருவையும் மற்ற சீஷர்களையும் கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் புடைக்கிறதற்கு இயேசுவிடம் உத்தரவு கேட்டுக்கொண்டான் என்று லூக்கா 22:31ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் வருகிற உபத்திரவங்கள் நன்மைக்கேதுவாய் முடியும். இயேசு கூடப் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதம் கூறுகிறது.
நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன், இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன் என்று சங்கீதம் 119:67ல் எழுதப்பட்டிருக்கிறது. உபத்திரவங்கள் கர்த்தருடைய வழியில் நாம் நடக்க உதவி செய்யும். கர்த்தர் எசேக்கியா ராஜாவிற்கு பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்ததின் நிமித்தம் மனாசே பிறந்தான். எசேக்கியா மரித்த வேளையில் மனாசே அவனுடைய பன்னிரண்டாவது வயதில் யூதாவின் மேல் ராஜாவாய் மாறினான். ஐம்பத்தைந்து வருஷம் அவன் அரசாண்டான். அவனுக்கு இணையான துன்மார்க்க ராஜா யூதாவிலும், இஸ்ரவேலிலும் கூட எழும்பவில்லை. அவன் கர்த்தருடைய ஆலயத்தில் பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டான். அவன் தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, அவர்களை அக்கினியில் பலிசெலுத்தினான், நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அனுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். மனாசே தன் ஜனமாகிய யூதாவின் குடிகளை வழிதப்பிப்போகப்பண்ணினான். கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார், அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, கொக்கிகளை அவன் சரீரத்தில் மாட்டி, வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் அதிக வேதனையையும் நெருக்கத்தையும் அனுபவித்த வேளையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். கர்த்தர் அவனுடைய கெஞ்சுதலுக்கு இரங்கி அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார். அப்போது அவன் கர்த்தரே தேவன் என்று அறிந்தான். அவன் பட்ட பாடுகளும் உபத்திரவமும் கர்த்தருடைய வழிகளையும், பிரமாணங்களையும் கற்றுக் கொள்ளும் படிக்குச் செய்தது. அவனை மறுபடியும் புதுப்பித்தது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவங்களைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். ஒருவேளை உபத்திரவங்கள் நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் என்றால் கர்த்தரிடம் உடன் திரும்ப வந்துவிடுங்கள். அப்போது கர்த்தர் உங்களை விடுவித்து, திரும்ப மீண்டும் எடுத்துக் கட்டுவார். உங்களையும் உபத்திவப்பட்டது நல்லது என்று சாட்சி பகிரும்படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae