பெரிய கொந்தளிப்பு (Great Storm).

அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள், அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும், என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான் (யோனா 1:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/K02f0Lc3GY8

யோனா ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி. கர்த்தர் அவனுக்குக் கட்டளைக் கொடுத்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாய்  பிரசங்கிக்குப்படிக்குக் கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகி தாஷீசுக்கு ஓடிப்போனான். ஆண்டவருடைய சமூகத்தை விட்டு   விலகிச் சென்றதினால் கர்த்தர் பெருங்காற்றைச் சமுத்திரத்தின் மேல் வரவிட்டார். ஆகையால் கப்பல் உடையும் அளவுக்கு  பெருங்கொந்தளிப்பு  சமுத்திரத்தில் உண்டானது. அந்த கொந்தளிப்புக்குக் காரணம்  யோனாவாய்  காணப்பட்டான். அவனோடு கூட கப்பலில் காணப்பட்ட மற்றவர்களுடைய கலக்கத்திற்கும் பயத்திற்கும் கூட அவன் பொறுப்பாகி விட்டான். தேவ சமூகத்தை விட்டு தூரமாய் ஜீவிக்கிற ஒரு கிறிஸ்தவன்,    அவன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் சபைக்கும் தேசத்திற்கும் கலக்கத்தை உண்டுபண்ணுகிறவனாய் காணப்படுவான்.  அவன் மிகுந்த நன்மைகளைக் கெடுக்கிறவனாய் காணப்படுவான்.

அப்போஸ்தலனாகிய பவுல் இத்தாலியா தேசத்திற்கு இராயனுடைய விசாரணைக்காக நாடுகடத்தப்பட்டான்.  யூலியு என்னும் பேர் கொண்ட ஒரு நூற்றுக்கதிபதியின் பொறுப்பில் இராணுவ காவலோடு கப்பலில் அவன் கைதியாக மற்றவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் கர்த்தருடைய தீர்மானத்தின்படி அங்கு கொண்டு செல்லப்பட்டான். அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே,    திடன்கொள்,    நீ என்னைக்குறித்து  எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சி கொடுக்கவேண்டும் என்றார் (அப். 23:11). அவன் கர்த்தருடைய திட்டத்தின்படி,    அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து,    அவருடைய சமூகத்தோடு ரோமாபுரிக்குச் சென்றான். திடீரென்று யூரோக்கிலிதோன்  என்னும் காற்று கப்பலின்மேல் மோதினது. கப்பலில் காணப்பட்ட அத்தனை பேரும் மரிப்பது நிச்சியம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். அந்த வேளையில் பவுல் அவர்களை நோக்கி  திடமனதாயிருங்கள்,     கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம்  வராது.  ஏனென்றால்,    என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே,    பயப்படாதே,    நீ இராயனுக்குமுன்பாக  நிற்கவேண்டும். இதோ,    உன்னுடனே கூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவு பண்ணினார் என்றான். பவுலின் நிமித்தம் கப்பலில் காணப்பட்ட எல்லாரும் பாதுகாக்கப்பட்டார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் உங்களைச்  சுற்றியிருக்கிறவர்களுக்குக்  கொந்தளிப்பையும்,    கலக்கத்தையும்,    சமாதானக்கேட்டையும் உண்டு பண்ணுகிறவர்களாய் யோனாவைப் போலக் காணப்படுகிறீர்களா?  இல்லையேல் ஒரு பவுலைப் போலப்  பயத்தைப் போக்கி,    திடநம்பிக்கையை உண்டாக்குகிறவர்களாய் காணப்படுகிறீர்களா?  நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்து அவருடைய சமூகத்திற்குள்  காணப்படுவதை  வைத்துத்தான் அதை நிர்ணயிக்கமுடியும்.  தேவசமூகத்தை  இழந்து ஜீவிக்கிற ஒரு கிறிஸ்தவனால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் சபைக்கும் ஒரு நன்மையும் உண்டாவதில்லை. ஆகையால் தேவனோடு சஞ்சரியுங்கள்,    மற்றவர்களுக்கு   ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாய் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae