அழகு (Beauty).

எபிரெயர் 11:23 மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fcVrR7WFoCA

பொதுவாக ஒரு பிள்ளை பிறந்தவுடன் அந்த பிள்ளை எந்த நிறத்தில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். குறிப்பாக பிறந்த பிள்ளையின் காது என்ன நிறத்தில் இருக்கிறது என்று பார்ப்பதுண்டு. அந்த காது வெள்ளையாக இருந்தால் பிள்ளை நல்ல நிறத்தில் அழகாக உள்ளது என்று சொல்லுவார்கள். பிள்ளையின் காது கருப்பாக இருந்தால், பிள்ளை கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். சூலமித்தி கருப்பாக இருந்தாலும் அழகாக இருந்தாள். காரணம் அவள் தன் நேசருக்கு பிரியமானவளாக இருந்தாள். ஆண்டவர் எல்லாரும் அழகாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார். எந்த தகப்பனாவது தன் பிள்ளை அழகில்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவார்களா? அப்படியென்றால், நம்முடைய பரம தகப்பன் நாம் எவ்வளவாய் அழகுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று விருப்பமுடையவராய் இருப்பார் என்று பாருங்கள்.

ஆபிரகாம் தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன் என்று சொல்லுவான். காரணம் அவள் தன் கணவன் ஆபிரகாமை ஆண்டவன் என்று அழைத்து அழகுள்ளவளாய் இருந்தாள். அதேபோல ரெபெக்காளும் அழகுள்ளவள், அவள் தன் மணவாளன் ஈசாக்கை சந்திக்க ஆவலோடு பிரயாணம் செய்தவள். மோசே பிறக்கும்போதே அழகுள்ள பிள்ளையாய் இருந்தான், பின்நாட்களில் ஆண்டவருக்காக பெரிய காரியங்களை செய்தான். அப்சலோமும் அழகாய் இருந்தான், ஆனால் அவன் தன் தகப்பனாகிய தாவீதுக்கு ஆகாதவனாய் போய்விட்டான். காரணம் அப்சலோமின் ஆவிக்குரிய வாழ்க்கை அழகாய் இல்லை. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் கருப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும், புறம்பான அழகை விரும்பாமல், ஆவிக்குரிய அழகை விரும்புகிறவர்களாய் காணப்பட வேண்டும். அப்படிப்பட்ட அழகுள்ள பிள்ளையாய் நாம் கர்த்தருக்கு இருக்க வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது (1 பேது 3:3,4) என்று வசனம் கூறுகிறது. வெளிப்புறம்பான அலங்காரம் நமக்கு அழகாய் அழகாய் இல்லாமல் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் அழகாய் இருக்க வேண்டும். ஆவிக்குரிய அழகை இழந்தவன், பூமிக்குரிய ஆடம்பர அணிகலன்களை அணிந்து கொள்வது தேவன் வெறுக்கக்கூடியவை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம் (நீதி 11:22). சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் (நீதி 31:30) என்று வசனம் கூறுகிறது. மதிகேடு, வெளிபுறம்பான சௌந்தரியம் போன்றவற்றை வெறுத்து, கர்த்தருக்கு பயப்படுத்தல் என்னும் அழகு, பரிசுத்தம் என்னும் அழகு, தாழ்மை என்னும் அழகு, கீழ்ப்படிதல் என்னும் அழகு, விசுவாசம் என்னும் அழகு, நம்பிக்கை என்னும் அழகு போன்றவற்றில் தேறினவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org