ஊற்றுவேன் (I will pour out).

ஏசாயா 44:3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YtLlicW0MfQ

ஆண்டவர் கொடுக்கும் ஒரு வாக்குத்தத்தம் நான் உங்கள் மேலும் உங்கள் சந்ததியின் மேலும் ஊற்றுவேன் என்று கூறுகிறார். மேற்குறிப்பிட்ட வசனத்தில் இரண்டு இடங்களில் ஊற்றுவேன் என்று கூறுகிறார். உங்கள் சந்ததியின் மேலும் சந்தானத்தின் மேலும் அதாவது உங்கள் பிள்ளைகள் மேலும், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், ஆவியையும், ஆசீர்வாதத்தையும் தெளிப்பேன் என்று சொல்லவில்லை. மாறாக, ஊற்றுவேன் என்று கூறுகிறார். தண்ணீரை ஒருவர் மேல் தெளிப்பதற்கும், ஊற்றப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீரை தெளித்தால் உடம்பில் சில இடம் மாத்திரம் நனையும். அதே தண்ணீர் தெளிக்கப்படுவதற்கு பதிலாக, ஊற்றப்பட்டால், உடம்பு முழுவதும் நனையும். வானத்திலிருந்து சாரல் மழை வந்தால் சில இடங்கள் மாத்திரம் நனையும். அதேவேளையில் வானத்திலிருந்து பயங்கரமான மழை ஊற்றப்பட்டால், காண்கிற அனைத்தும், மரம் கொடி தாவரங்கள் விலங்குகள் பறைவைகள் மனிதன் பூமி போன்ற அனைத்தும் நனைத்துவிடும். அதுபோல தான் தேவனின் ஆசீர்வாதம் உங்கள் சந்ததியின் மேலும் சந்தானத்தின் மேலும் ஊற்றப்படும். ஆண்டவர் உங்கள் பிள்ளைகள் மேல் ஊற்றுவார்.

கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது அவர் அவருடைய சினத்தை ஊற்றுவார்(எசே 21:31), கோபத்தை ஊற்றுவார் (எசே 22:31), எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றுவேன் (எசே 30:15) என்று சொல்லுகிறார், யூதாவின் பிரபுக்கள் மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன் (ஓசியா 5:10) என்றும் கூறுகிறார்.

இப்படியிருக்க, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் கோபத்தையும் உக்கிரதையும் சினத்தையும் அல்ல, நான் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்று கர்த்தர் கூறுகிறார். அவர் உங்கள் மேல் ஊற்றப்படும்போது என்ன நடக்கும்? கர்த்தர் சொல்லுகிறார், நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்பதாக (எசே 39:29). அவர் உங்கள் மேலும் சந்ததிகள் மேலும் ஊற்றப்படும்போது அவருடைய முகம் உங்களுக்கு மறைக்கப்படுவதில்லை. இயேசுவுக்கு பிதாவின் முகம் மறைக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தது, ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இயேசுவின் முகம் என்றும் மறைக்கப்படுவதில்லை. நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வசனத்தின் படியும், ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன் என்ற வார்த்தையின்படியும், உங்கள் மேலும் உங்கள் பிள்ளைகள் மேலும் அவர் ஊற்றப்படுவார். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆசீர்வாத மழை உங்கள் மேல் பொழியும்படி கர்த்தர் செய்வார். வானத்து மதகுகளை திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org