அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் (சங். 133:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jmyG0RHOWt0
ஆசீர்வாதம் என்ற வார்த்தையை விரும்பாதவர்கள் ஒருவரும் இருப்பதில்லை. நம்முடைய தேவனும் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். மேற்கூறப்பட்ட வசனத்தில் மாத்திரம் என்றென்றைக்கும் ஆசீர்வாதமும் ஜீவனும் கர்த்தர் கட்டளையிடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாருக்குக் கர்த்தர் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை வாக்களித்திருக்கிறார்? ஒருமித்து வாசம் பண்ணுகிற கர்த்தருடைய பிள்ளைகளுக்கு என்று சங். 133:1,2-ல் வாசிக்கிறோம். வேதம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைப் பற்றிக் கூறும்போது, இயேசு அந்த சரீரத்தின் தலையென்றும் நாம் அத்தனை பேரும் அவயவங்களாகவும் காணப்படுகிறோம் என்று கூறுகிறது. ஒரு சரீரத்தின் அவயவங்கள் அத்தனையும் ஒன்றித்துச் செயல்படுவது போலக் கர்த்தருடைய பிள்ளைகள் ஒன்றித்துச் செயல்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்ட அபிஷேக தைலத்தில் ஐந்து விதமான பொருட்கள், வெள்ளைப்போளம், கருவப்பட்டை, சுகந்த வசம்பு, இலவங்கப்பட்டை, ஒலிவ எண்ணை (யாத். 30:23-2) இருந்தாலும், அவைகள் ஐந்தும் சேர்ந்து ஒரே அபிஷேக தைலமாய் இருந்து ஒரே நறுமணத்தைத் தருவது போல, கர்த்தருடைய பிள்ளைகள் பலிவிதமானக் கலாச்சார பின்னணிகளிலிருந்து கர்த்தருக்குள் வந்தாலும், நாம் அத்தனை பேரும் கர்த்தருக்குள் ஒன்றாய் இருந்து கிறிஸ்துவின் வாசனையை வீசவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
ஆதி சபையின் நாட்களில் பேதுதுரு பிரசங்கம் செய்யும்படிக்குக்கு எழும்பி நின்ற வேளையில், அவனோடு மற்ற பதினொன்று அப்போஸ்தலர்களும் ஒன்றித்து நின்றார்கள் (அப். 2:14). ஆகையால், ஒரே பிரசங்கத்தில் 3000 பேர் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று எபிரேய வாலிபர்களும் ஒருமனதோடு, பாபிலோனியத் தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தார்கள். அவர்கள் நேபுகாத்நேச்சாரை நோக்கி: நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்று ஒருமித்துக் கூறினார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் கடுங்கோபமூண்டு, சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுததான். மூன்று வாலிபர்களையும் அக்கினி சூளையில் போட்ட வேளையில், நான்கு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் ராஜாவின் கண்கள் கண்டது, அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை, நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்ததைக் கண்டதினால் இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான். காத்தருடைய ஜனங்கள் ஒன்றித்து நிற்கும் போது, புறஜாதிகள் தேவனண்டை வருவார்கள், அதனிமித்தம் தேவனுடைய ராஜ்யம் வளர்ந்து பெருகும். குடும்ப வாழ்க்கையில் சத்துருவுக்கு இடம் கொடாதிருங்கள். கடைசி நாட்களில் கிறிஸ்தவக் குடும்பங்களில் தான் அனேக பிரிவினைகளும், வழக்குகளும் காணப்படுகிறது. ஒரு திருச்சபையின் குடும்பங்கள் சமாதானமாய் காணப்பட்டால், சபைகள் சமாதானம் பெற்று வளரும். ஆகையால் தான் சத்துரு சமாதானக் கேடுகளைக் குடும்பங்களில் விதைக்கிறான். ஒண்டியாய் இருப்பதிலும் இரண்டு பேராய் இருப்பது நல்லது என்று கர்த்தர் கண்டு குடும்பங்களை இணைக்கிறார். ஆகையால் குடும்ப வாழ்க்கையை ஒன்றித்துக் கட்டியெழுப்புங்கள்.
தனக்குத்தானே பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும், எந்தப் பட்டணமும் நிலைநிற்காது, எந்த வீடும் நிலைநிற்பதில்லை (மத் 12:25) என்று ஆண்டவர் இயேசு கூறினார். இஸ்ரவேல் சபையின் வீழ்ச்சிக்குக் காரணம் ஒருமனமின்மையே. கானானை வேவு பார்த்து வரும்படிக்கு மோசே 12 பேரை அனுப்பின வேளையில், பத்து பேர் துர்செய்தியையும், இரண்டு பேர் நற்செய்தியையும் கொண்டுவந்தார்கள். ஆகையால், அனேகமானவர்களுடைய அவ்விசுவாசத்தினாலும், ஒருமனமின்மையினாலும் நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரியவேண்டியதாய் இருந்தது. நம்மில் ஒருவன் ஆயிரம் பேரையும், இரண்டு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவார்கள் என்பதைச் சத்துரு அறிந்திருப்பதினால் தான், நாம் இணைந்து நின்று கர்த்தருக்காகப் பெரியக் காரியங்களைச் செய்வதைத் தடுக்க பலவிதமான பிரிவினைகளைக் கொண்டு வருகிறான். கர்த்தருடைய பிள்ளைகள் சபையாய் ஒன்றித்து, ஒருமனதோடு நில்லுங்கள், இணைந்து கர்த்தரைச் சேவியுங்கள். அப்பொழுது என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கர்த்தர் உங்களுக்கு தந்தருளுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar