ஆலோசனை சொல்லும் கர்த்தர் (The Lord gives counsel).

சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Ex_TDEfcJU

திருமணத்திற்கு ஆயத்தமாகிறவர்களுக்கு, எப்படி வாழ வேண்டும் என்று பல ஆலோசனைகளை பெற்றோர்கள் சொல்லுவார்கள். திருமண விவாகத்திற்கு செல்லும் தம்பதிகளுக்கு நீதிமன்றமும், மகளிர் மன்றமும், பிரிந்து வாழாமல் சேர்ந்து வாழும்படி பல ஆலோசனை சொல்லுவார்கள். தூரத்திலிருக்கும் ஊர்களுக்கு படிக்கவோ, வேலைக்கோ செல்பவர்களுக்கோ, தங்கள் பெற்றோரார்கள் பல ஆலோசனைகளை சொல்லுவார்கள். இது ஒருபுறமிருக்க, தீய ஆலோசனை சொல்லுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். மதுபானம் குடித்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லுகிற ஆலோசனைக்கர்களும் திரளாக காணப்படுகிறார்கள். ஆகையால் இந்த உலகத்தில் நல்ல ஆலோசனை வழங்குபவர்களும் உண்டு, தீய ஆலோசனை வழங்குபவர்களும் உண்டு.

அகித்தோப்பேலின் ஆலோசனை அபத்தமாய் போகும்படி கர்த்தர் செய்தார். காரணம் அவனுடைய ஆலோசனை பொல்லாப்பாய் இருந்தது. ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி, தவறான முடிவை எடுத்தான். அகசியா ராஜா துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள். இப்படிப்பட்ட பொல்லாத ஆலோசனை வழங்குபவர்கள் இருக்கிறதினால் தான் யோபு சொன்னான், துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக (யோபு 21:16) என்பதாக. சங்கீதக்காரன் சொல்லுவான், துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும் என்பதாக (சங் 64:2). மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனை பண்ணுகிற கூட்டங்கள் இந்த உலகத்தில் உண்டு. பரிசேயர்களும் சதுசேயர்களும், இயேசுவை எப்படி கொலைசெய்வது என்று ஆலோசனை செய்தார்கள். ஆகையால் பொல்லாதவர்களின் ஆலோசனைக்கு கர்த்தர் உங்களை தூரமாக்கி, கர்த்தரே உங்களுக்கு ஆலோசனை கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

கர்த்தர் சொல்லுகிறார் நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவேன். என்ன தீர்மானம் எடுப்பது என்று திகைத்துபோகிற சூழ்நிலைகளில் கர்த்தர் உங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவார். போக்குவரத்து சந்திப்பில் நிற்கும் சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்களென்றால், வலப்பக்கம் இடப்பக்கம் சாயும்போது, வழி இதுவே என்று சொல்லும் சத்தத்தை நீங்கள் கேட்பீர்கள். யாரை திருமணம் செய்வது, எங்கு வேலைக்கு செல்வது, எப்பொழுது வேலையை விட்டு ஓய்வு பெறுவது, எங்கு சபையை நிறுவுவது, யாருக்கு உதவுவது, யாருக்கு உதவ கூடாது, எந்த கூட்டத்திற்கு கலந்துகொள்ளுவது, யாரை பார்க்க செல்வது, யாரை பார்க்கக்கூடாது, யாரை பின்பற்றுவது, யாரை பின்பற்றக்கூடாது என்று எல்லா ஆலோசனைகளையும் கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன் (சங் 16:7) என்று சொன்ன சங்கீதக்காரனை போல, கர்த்தருடைய ஆலோசனையால் நீங்கள் திருப்தியடைந்து, அவரை துதிக்கும் நாளுக்கு கர்த்தர் உங்களை அழைத்து செல்வார். அவர் உங்களை போதித்து நடத்தும் துணையாளர்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org