உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது (ஏசாயா 6:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aY0Fc5vMzDw
பரலோகத்தில் ஒரு சிங்காசனம் காணப்படுகிறது. அந்த சிங்காசனத்தில் இயேசு ராஜாவாக அமர்ந்திருக்கிறார். அவர் உயரமும் உன்னதமுமான ராஜா, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் அவருக்கு இணையானவர்கள் ஒருவரும் இல்லை. பூமியில் காணப்படுகிற எல்லா அதிகாரங்களும் அவருடைய அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகிறது. அவரே ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஒருவனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவராய் காணப்படுகிறார். காண்கிறவைகள் எல்லாம் அவரால் அவருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டது. அவர் ஒரு வார்த்தை சொல்ல அப்படியே ஆகும், அவர் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும். அவர் சர்வ வல்லமையுள்ள ராஜா. ஒரு நாள் இந்த ராஜாவை ஏசாயாவின் கண்கள் கண்டது. உசியாவை நம்பி வாழ்ந்த அவனுடைய வாழ்க்கை தலைகீழாய் மாறினது.
கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவைக் குறித்தும், அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் குறித்து நீங்கள் அறியும் போது உங்கள் வாழ்க்கையும் மாறும், மனிதர்களை நம்பி வாழும் வாழ்க்கை முடிவுக்கு வரும். உசியா ராஜா தன்னுடைய 16வது வயதில் யூதாவின் மேல் ராஜாவானான். 52 வருடங்கள் அவன் யூதாவை அரசாட்சி செய்தான். உசியாவிற்கு அசரியா என்ற இன்னொரு பெயரும் உண்டு. அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன், தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான், அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார். ஆனால் அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாக, மனம் மேட்டிமையடைந்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். ஆகையால் அவனைக் குஷ்ட ரோகத்தினால் கர்த்தர் வாதித்ததின் நிமித்தம் அந்த வியாதியில் அவன் மரித்துப் போனான். யூதாவின் ராஜாவுடைய மரணம் ஏசாயாவை நிலைகுலையச் செய்தது. அந்த வேளையில், ஆலயத்திற்கு வந்த அவன் என்றும் உயிரோடிருக்கிற இயேசு ராஜாவைத் தரிசனத்தில் கண்டான். அவனுக்குள் புது நம்பிக்கையும் உற்சாகமும் உண்டானது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் பலரை நம்பி ஏமாந்த நிலையில் காணப்படலாம். அதிகாரத்தில் இருக்கிறவர்களுடைய உதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்திருக்கலாம். நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்பாதே, நம்பப்படுவதற்கு அவன் எம்மாத்திரம் என்று வேதம் கேட்கிறது. ஆதலால் கர்த்தரை நம்பி வாழுங்கள். கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான் என்று எரே.17:7, 8ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாதத்தில் கர்த்தர் ஒருவரே உங்கள் நம்பிக்கையாகக் காணப்படட்டும். அப்போது நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிற காரியங்களில், ஆண்டவர் ஒரு அற்புதத்தைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae