தானி 4:30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9we9xBM1vOg
இந்த உலகத்தில் வாழும் தேவ ஜனங்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய அதிமுக்கியமான மூன்று இச்சைகளில், மூன்றாவதாக ஜீவனத்தின் பெருமை என்னும் இச்சையாய் காணப்படுகிறது (1 யோவா 2:16).
ஆங்கிலத்தில் SIN என்பதற்கும் PRIDE என்பதற்கும் நடுவில் இருக்கும் எழுத்து I என்பதாய் காணப்படுகிறது. இன்று அநேகருக்குள்ளாக இருக்கும் ஒரு வியாதி இந்த I என்பது அதாவது நான் என்னும் அகந்தையாய் காணப்படுகிறது. நேபுகாத்நேச்சார் பெருமை பிடித்த ராஜா. எல்லாம் என்னால், எனக்கென்று, எனக்காக, நான் கட்டின மகா பாபிலோன் என்று சொன்னான். இப்படி தான் உலகத்தில் பல தலைவர்களும் நான் என்னும் அகங்காரத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட பெருமை பிடித்தவர்களாய் தேவ ஜனங்கள் ஒருநாளும் காணப்படலாகாது. இந்த பெருமை சபைக்குகளுக்கும் இந்நாட்களில் காணப்படுகிறது. சிலருக்கு ஜாதி பெருமை. எங்கள் சபையில் எங்களை சேர்ந்து ஜாதி உள்ள போதகர்தான் வரவேண்டும் என்று சொல்லும் சபைகள் உண்டு. சிலருக்கு அதிகார பெருமை, சிலருக்கு அந்தஸ்து என்னும் பெருமை, சிலருக்கு பணக்காரன் என்னும் பெருமை, சிலருக்கு நான் தான் அழகு என்னும் பெருமை, சிலருக்கு நான் வைத்திருக்கும் கைபேசி தான் விலையுர்ந்தது என்பதில் பெருமை. இப்படி அநேக விதங்களில் பெருமை, சபை ஜனங்களுக்குள்ளாகவும் காணப்படுகிறது. இயேசுவுக்குள்ளாக இருந்த தாழ்மையின் சிந்தையை தொலைத்துவிட்டோமா? இல்லை அதை குறித்த வாஞ்சையும் அறிவும் இல்லையா? என்ற கேள்விகளும் இன்றைய கிறிஸ்துவ உலகில் காணப்படுகிறது.
சங்கீதக்காரன் சொல்லுகிறான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன் (சங் 131:1,2). இயேசு பெரும்பாலும் தரித்திரருக்கு சுவிசேஷம் அறிவித்தார்; மிக சிறியவராகிய என் சகோதரர் என்று தன்னை துன்புறுவோர்களோடு அடையாளப்படுத்திக்கொண்டார். அப்படியென்றால் அவர் பணக்காரர்களை நேசிக்கவில்லை என்றோ, செல்வமுடையவர்களை ஒதுக்கினார் என்றோ அர்த்தம் இல்லை. அவர் சமுதாயத்தில் உயர்மட்டத்திலுருப்பவர்களை தன்னுடைய ஆதாயத்திற்க்காக காக்கா பிடிக்கவில்லை. இன்றோ பலர், அரசியல்வாதிகள் தொடங்கி, சாதாரண வேலையில் பணிபுரிபவர்கள் வரை மற்றவர்களை எப்படி முகஸ்துதி பாடி, அவர்களை காக்கா பிடிக்க முடியும் என்றே முயற்சிக்கிறார்கள். சங்கீதம் 22ல் இயேசு தன்னை நானோ ஒரு புழு என்று அடையாளப்படுத்திக்கொள்ளுகிறார். இறுதியாக, இயேசு தன்னை தானே சிலுவை மட்டும் தாழ்த்தினார்.
இப்படி இயேசு நமக்கு தாழ்மையை முன்மாதிரியாக வைத்து சென்றிருக்க, பல விசுவாசிகளுக்கு ஜீவனத்தின் பெருமை இந்நாட்களில் காணப்படுகிறது. ஊழியக்காரர்களை எடுத்துக்கொண்டாலும், தாழ்மை எளிமைக்கு பதிலாக பந்தா பண்ணுகிற ஊழியக்காரர்களும் எழும்பி விட்டார்கள். ஊழியக்காரர்கள் பிரசங்க பீடத்திற்கு வரும்போது நடுக்கத்தோடு வராமல், சினிமா நட்சத்திரங்களை போலவும், அரசியல்வாதிகள் போலவும் வருகிறார்கள். இவைகள் தான் ஜீவனத்தின் பெருமை. நம்முடைய ஆண்டவர் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறவர். சாத்தான், அவனுடைய பெருமையினிமித்தமே கீழே தள்ளப்பட்டான். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறவர். அவருடைய கிருபை நமக்கு இருக்குமென்றால், உலகத்திலிருக்கும் வரை நன்மையையும் நம்மை தொடரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org