பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர் (சங்கீதம் 8:2).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FRvhVHNO3Lw
குழந்தைகளைப் போலப் பலகீனமாய் காணப்படுகிற, அவருடைய பிள்ளைகளான நம் மூலம் துதியை உண்டு பண்ணி, அதன் மூலம் நம்மை பெலனடையச் செய்கிறவர் கர்த்தர். இயேசு சிலுவையில் தன் ஜீவனைக் கொடுப்பதற்கு முன்பு எருசலேம் வீதிகளில் கழுதைக்குட்டியின் மேல் பவனியாக வந்தார். அந்த வேளையில், முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். இயேசு தேவாலயத்தை இரண்டாம் விசை சுத்திகரித்த பின்பு, அனேக குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்கள் எல்லாரையும் இயேசு சொஸ்தமாக்கினார். அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு கோபமடைந்து, இயேசுவை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரா என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா (மத். 21:16) என்று இயேசு கூறின வேளையில் இந்த தீர்கதரிசன வார்த்தை நிறைவேறினதாய் காணப்பட்டது.
துதியில் பெரிய வல்லமை காணப்படுகிறது என்பதைக் கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்து கொள்ளவேண்டும். நம்முடைய எல்லா பகைஞர்களையும் பழிகாரர்களையும் அடக்கி போடுகிற வல்லமை துதியில் காணப்படுகிறது. நம்முடைய சத்துருவாகிய பொல்லாத பிசாசை அடக்கிப் போடுகிற வல்லமை நம் துதியில் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள், சிறு பிள்ளைகளைப் போல, வெட்கப்படாமல் ஆண்டவரை எல்லா இடங்களிலும் எவ்வேளையிலும் நாம் துதிக்கிறவர்களாய் காணப்படவேண்டும். கர்த்தர் நம்மை அவருக்காக ஏற்படுத்தினதின் நோக்கமே அவரைத் துதிக்கும்படிக்கும், அவருடைய துதியைச் சொல்லி வருவதற்கும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
பவுலும், சீலாவும், தங்களுடைய ஊழியத்தின் பாதையில், ஒரு ஸ்திரீயைப் பிடித்திருந்த அசுத்த ஆவியை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே துரத்தின வேளையில், அவளால் ஆதாயம் அடைந்தவர்கள், அனேக அடிகளை அடித்து, அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளிடம் யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்று கூறினார்கள். அதிகாரிகள் அவர்களைச் சிறைச்சாலையிலே வைத்து, பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடின வேளையில், சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. துதிக்குச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அசைக்கிற வல்லமைக் காணப்படுகிறது.
யோசுவாவின் நாட்களில் அவர்கள் கானானுக்குள் பிரவேசித்த உடன் அவர்களுக்கு முன்பாக காணப்பட்டது அடைபட்டுபோன எரிகோ பட்டணமாயிருந்தது. கர்த்தர் அவர்களிடம் ஆறு நாட்கள் ஒருமுறைப் பட்டணத்தைச் சுற்றிவரும்படிச் சொன்னார். ஏழாம் நாள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றி வரவேண்டும், ஆசாரியர்கள் நெடுந்தொனியாய் எக்காளத்தை ஊதும்போது ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள், உடனே அவர்களுக்கு முன்பாக எரிகோவின் அலங்கங்கள் இடிந்து விழுந்தது. துதியின் ஆர்ப்பரிப்பு சத்தத்திற்கு முன்பு எரிகோவின் தடைகள் நிற்கமுடியவில்லை. யோசபாத் ராஜாவின் நாட்களிலும், மூன்று தேசத்தின் ராஜாக்கள் அவனுக்கு எதிராக வந்தார்கள். அவன் யூதாவை பாடி, துதிசெய்ய முன்னிறுத்தின வேளையில் எதிரிகள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்து அழியும்படிக்குக் கர்த்தர் செய்தார்.
நீங்கள் துதிக்கும் போது கர்த்தருடைய வல்லமை வெளிப்படும். எரிகோக்கள் விழும், சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாகும், உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அழிவார்கள். கர்த்தர் அற்புதங்களைச் செய்வார். கர்த்தரை உயர்த்தும் துதி எப்பொழுதும் உங்கள் நாவில் இருக்கட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar