ஆதி 8:6-8 . நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iZfnEIJIzZQ
நோவா பூமியின்மேலிருந்து ஜலம் வற்றிபோயிற்றா என்று அறிய முதலாவது காகத்தை அனுப்புகிறான். இந்த காகம் போக்கும் வரத்துமாய் இருந்தது. ஜலப்பிரளயத்தில் செத்துப்போன மனிதர்கள், செத்துப்போன பறவைகள், செத்துப்போன மிருகங்களை ருசிபார்த்த பிறகு மீண்டும் பரிசுத்த ஸ்தலமாகிய அரராத் மலைக்கு வந்தது. பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே (பிர 8:10) என்று ஞானி சொல்லுகிறார். ஆகையால் தான் என்னவோ இன்றும் நம்முடைய ஊர்களில் காக்காவுக்கு சோறு வைக்கும்போது செத்துப்போன தாத்தா காக்கா ரூபத்தில் வந்து சோறு சாப்பிடுகிறார் என்று சொல்லுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இப்படித்தான் காகத்தை போல அநேக விசுவாசிகள் இன்று காணப்படுகிறார்கள். வாரத்தில் ஆறு நாளும் குடியும், குடித்தனமும், பொய்யும் புரட்டும் பேசி, சபைக்கு வருகிற நாள் மாத்திரம் தங்களை உத்தமர்களை போல காட்டிக்கொள்ளுகிற விசுவாசிகள் இன்றும் காணப்படுகிறார்கள். இவர்களெல்லாரும் காகத்திற்கு இருக்கும் சுபாவத்தை போல உலகத்திற்குள்ளும் பரிசுத்த ஸ்தலமாகிய சபைக்குள்ளும் போக்கும் வரத்துமாய் இருப்பவர்கள்.
இந்த காக்காவின் சுபாவத்தை அறிந்த நோவா, அடுத்த முறை ஜலம் வற்றியதா என்று அறிய புறாவை ஜன்னல் வழியாக அனுப்புகிறான். இந்த புறா காகத்தின் சுபாவம் உடையதாய் அல்ல. காகத்தை மாம்ச சுபாவத்திற்கு ஒப்பிடலாம், புறாவை ஆவிக்குரிய சுபாவத்திற்கு ஒப்பிடலாம். அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது (ஆதி 8:9). புறா கபடமற்றது என்று மத்தேயு 10:16 கூறுகிறது. நாத்தான்வேல் கபடற்ற உத்தம இஸ்ரவேலன். ஆவிக்குரிய விசுவாசிகளுக்கு, உலகத்திலிருக்கும் மாம்சீக காரியத்தில் நாட்டம் இருக்காது. கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாளாய் நிலைத்திறப்பதையே வாஞ்சிப்பார்கள். நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்று தாவீது கூறுகிறான். புறா மீண்டும் பேழைக்குள் வர தீர்மானித்தது, பேழைக்குள்ளேயே இருக்க தீர்மானித்தது. இப்படி கபடற்றவர்களாக, ஆவிக்குரிய மாளிகையாக நாம் ஒவ்வொருவரும் எழும்ப வேண்டும் என்றே கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். காகாவின் சுபாவமல்ல, புறாவின் சுபாவமே நமக்குள் இருக்கட்டும். மாம்ச சுபாவம் அல்ல, ஆவிக்குரிய சுபாவமே நமக்குள் காணப்படட்டும். சபைக்கும் உலகத்துக்கும் போக்கு வருவாய் இருப்பவர்களாக அல்ல, சபைக்குள் நிலைத்திருக்கவே வாஞ்சிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org