இரண்டு விதமான விசுவாசிகள்  (Two kind of believers).

பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும்,     அவைகளின் பாவம் மிகவும்  கொடிதாயிருப்பதினாலும்,     நான் இறங்கிப்போய்,     என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்(ஆதி. 18:20,    21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Cp4y-kPMTDc

சோதோம்  கொமோராவின் ஜனங்கள் விபச்சாரம் பண்ணி,     அந்நிய மாமிசத்தை இச்சித்து,       கர்வமும் ஆகாரத் திரட்சியும் நிர்விசாரமும் உடையவர்களாகி,     சிறுமையும் எளிமையுமானவர்களுக்கு உதவி செய்யாமலும் காணப்பட்டவர்கள். அவர்கள் பாவம்  கொடியதாயிருந்ததால்,     கர்த்தர் அதைப் பார்த்து அறியும் படிக்கு இறங்கி வந்தார். அந்த வேளையில்,     நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பதில்லை,     ஏனென்றால் அவன் தன் பிள்ளைகளுக்கும்,     தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து,     கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்தபடியால் சோதோமின் அழிவைக் குறித்த  செய்தியை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் உடனே சோதோமின்  குடிகளுக்காகத் திறப்பிலே நின்று கர்த்தரை நோக்கி வேண்டினான். அவர்களுக்காக பரிந்து பேசி,     துன்மார்க்கனோடு நீதிமானையும் அழித்து விடாதிரும் என்று கூறி கர்த்தரை நோக்கி முறையிட்டான். கர்த்தரும் கடைசியில் பத்து நீதிமான்கள்  சோதோமில் காணப்பட்டால் நான் அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகள் ஆபிரகாமைப் போலக் காணப்பட வேண்டும். இந்நாட்களில் நாம் கேள்விப்படுகிற அத்தனை அழிவின் செய்திகளும் ஜெபக்குறிப்புகளாய் மாறவேண்டும். யுத்தங்களின் சத்தம் எங்கும் தொனிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஜனங்களை,     இயேசுவை அறிவதற்கு முன்பு பாதாளம் வாரிக் கொள்ளுகிறது. இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியாய்,     சகல ஜனங்களுடைய இரட்சகராய் காணப்பட்டிருந்தும் அனுதினமும் பாவங்களைத் தண்ணீரைப்  போலப் பருகி,     சோதோமின்   பாவங்களில் அகப்பட்டு,     இச்சை ரோகங்களினால் பாதிக்கப்பட்ட திரளான ஜனங்கள் உலகத்திலும்,     சபைகளிலும் காணப்படுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்காய் திறப்பிலே கண்ணீரோடு நின்று ஜெபிக்கிறவர்களைக் கர்த்தர் தேடுகிறார்.

இதே செய்தியை லோத்துவிற்கும் தேவதூதர்கள் அறிவித்தார்கள். நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்,     இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது,     இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள் என்று ஆதி. 19:13ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் லோத்து,     ஆபிரகாமைப்  போலத் திறப்பிலே நிற்கவில்லை. அந்தச் செய்தி அவனுக்குள் எந்த பாதிப்பையும்,     தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தான் இதுவரை வாழ்ந்த பட்டணத்தின் குடிகள் அழிக்கப்படப் போகிறார்களே என்ற கவலை அவனுக்குள் வரவில்லை. தன்னையும்,     தன் குடும்பத்தையும் அழிவிலிருந்து காத்துக் கொள்ள விரும்பினானே ஒழிய,     மற்றவர்களைக் குறித்து கவலைப் படவில்லை. இப்படிப்பட்ட திரளான விசுவாசிகளும் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். தங்களைச் சுற்றிக் காணப்படுகிற ஜனங்களைக் குறித்தோ,     உடன் விசுவாசிகளைக் குறித்தோ எந்தக் கவலையும் இல்லாமல்,     சுயமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்த அழிவின் செய்திகளும் இப்படிப்பட்டவர்களுக்குள்ளாய் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்காக ஜெபிக்கவும் விரும்புவதில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நாம் யாரைப் போலக் காணப்படுகிறோம்? ஆபிரகாமைப் போலக் காணப்படுகிறோமா,     இல்லையேல் லோத்தைப் போலக் காணப்படுகிறோமா? நான் தேசத்தையும்,     அதின் குடிகளையும் அழிக்காதபடிக்கு,     திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் ஒருவனைத் தேடினேன்,     ஒருவனையும் காணேன் என்ற ஆண்டவருடைய அங்கலாய்ப்பின் தொனியை நம்முடைய செவிகள் கேட்கட்டும்.    நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல்,     துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று கர்த்தர் கூறினார். ஆகையால் விசுவாசிகளாகிய நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாமைப் போலத் திறப்பிலே நின்று ஜெபிக்கிறவர்களாய் நாம் காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae