நீதியுள்ள தாமார் (Righteous Tamar).

யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்,     அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக்  கொடாமற்போனேனே  என்றான் (ஆதி. 38:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/o_eupxF2GgU

வேதத்தில் மூன்று தாமார்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. ஒன்று தாவீதின் குமாரத்தியாகிய தாமார் (2 சாமு. 13:1),     இன்னொருத்தி அப்சலோமின் குமாரத்தியாகிய தாமார் (2 சாமு.14:27),     மற்றவள் யூதாவின் மருமகளாகிய தாமார். யூதா அவளை தன்னிலும் அதிக நீதியுள்ளவள் என்று கூறினான்.  யூதா கானானிய  ஸ்திரீயாகிய சூவாவைத் திருமணம் செய்தான். அவர்களுக்கு ஏர்,     ஓனான்,     சேலா என்று மூன்று குமாரர்கள் பிறந்தார்கள். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்ற கானானிய  ஸ்திரீயை விவாகம் செய்துவைத்தான். ஏர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவனாய் காணப்பட்டதினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்,     அவனுடைய பாவம் என்ன என்று எழுதப்படவில்லை. இஸ்ரவேலின் வம்சத்தில் வந்த யூதா அவனைக் கர்த்தரை அறியும் அறிவில் வளர்த்தவில்லை. அவன் அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டதின் நிமித்தம் தன் குமாரனுக்கு முன்பு,     முன்மாதிரியையும்; வைக்கவில்லை. பின்பு தன் இரண்டாவது குமாரனாகிய ஓனானுக்கு அக்கால வழக்கத்தின்படி அவளை மனைவியாகக் கொடுத்தான். அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார். ஆகையால் யூதா பயந்து தன் மூன்றாவது குமாரனும் மரித்து விடுவான் என்று கருதி சேலாவை அவளுக்குப் புருஷனாகக் கொடுக்காமல்,     பொய்சொல்லி தாமாரைத் அவள் தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,     யூதா தன் தகப்பனோடும்,     சகோதரரோடும் காணப்பட வேண்டியவன். எதற்காக அவர்களை விட்டுப் பிரிந்து தன் நண்பனோடு சென்றான் என்று அறியமுடியவில்லை.   அது அவனுடைய வாழ்க்கையில் பலத்த அழிவைக் கொண்டு வந்தது என்பதை அறியமுடிகிறது. ஆகையால் ஒருநாளும் நீங்கள் ஒரு ஆவிக்குரிய வட்டாரத்தில் காணப்படும் போது,     அதை விட்டு,     உலகத்தோடு ஒன்றித்து விடாதிருங்கள். கூடா நட்பு கேடாய் முடியும். யூதாவைப் போல,     லோத்தைப் போல,     இளைய குமாரனைப் போலக் கஷ்டங்களைச் சம்பாதித்து விடாதிருங்கள்.


 தாமார்,     ஒரு புறஜாதி ஸ்திரீயாய் காணப்பட்டாலும் தன் கணவன் வம்சத்தைக் கட்ட வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் காணப்பட்டது. ஆகையால் அவள் வேறு புருஷர்களைத் தேடிச் செல்லவில்லை.   தேவ திட்டம் நிறைவேறக் கர்த்தரால் முன் குறிக்கப்பட்ட ஒரு பாத்திரமாய் அவள் காணப்பட்டாள். வேதத்தின் முதல் தீர்க்கதரிசனமான ஸ்திரீயின் வித்தாக இயேசு பிறக்க வேண்டும்,     யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதின் குமாரனாக அவர் பிறக்க வேண்டும். யூதா கோத்திரத்து சிங்கமாக இயேசு பிறப்பதைத் தடுக்க,     சத்துரு யூதாவின் குடும்பத்தில் பல குழப்பங்களையும் இழப்புகளையும் கொண்டு வந்தான்.  ஆனாலும் தாமாருக்குள்ளாக தன் வம்சத்தைக் கட்டி,     தேவத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கிய வாஞ்சை அதிகமாய் காணப்பட்டது. ஆகையால் தன்னை ஒரு தாசியைப் போலக் காட்டி,       யூதாவோடு சேர்ந்து பாரேஸை பெற்றெடுத்தாள். இவர்கள் உறவு பாவமாய் காணப்பட்டாலும் கர்த்தர் அதை நீதியாகக் கருதினார்,     தேவ திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். மனுஷன் பார்க்கிற விதங்களில் கர்த்தர் பார்ப்பதில்லை.   பாரேஸின் சந்ததியில் தாவீது பிறந்தான்,     தாவீதின் குமாரனாக இயேசு பிறந்தார். இயேசுவின் வம்ச வரலாற்றில் யூதாவும்,     தாமாரும்,     பாரேசும் இடம் பெற்றார்கள் (மத். 1:3). தேவ ஜனமே,     உங்கள் சூழ்நிலைகள் ஏதுவாய் காணப்பட்டாலும்,     கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து நன்மையான திட்டத்தை வைத்திருக்கிறார் (எரே.29:11). கர்த்தருடைய திட்டம் உங்கள் மூலம் நிறைவேறுவதற்கு உங்களை முழுவதுமாய் அவருக்கு அர்ப்பணித்து வாழுங்கள். அப்போது இயேசுவின் பிள்ளைகள் என்ற உறவில் இணைக்கப்பட்டு ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae