ஆதி 41:41 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று (சொன்னான்) சொல்லி…
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/AAPoUOh9zjM
ஆடு மேய்த்த தாவீதை ஆண்டவர் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக உயர்த்தினார். அடிமையாக இருந்த தானியேலை ஆண்டவர் உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு சென்று ஐந்து ராஜாக்களை சேவிக்கும்படி செய்தார். கதவருகே நின்றுகொண்டிருந்த மொர்தெகாயை தேசத்திற்கு அதிகாரியாக ஆண்டவர் உயர்த்தினார். அதுபோல அடிமையாக எகிப்து தேசத்திற்கு கொண்டு வரப்பட்ட யோசேப்பை ஆண்டவர் எகிப்து தேசத்திற்கு அதிகாரியாக உயர்த்தினார். யோசேப்பை உயர்த்தின தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்துவார். நீங்கள் வேலை செய்யும் ஸ்தலத்தில் யோசேப்பை போல உயர்த்தப்படுவீர்கள்.
வேதாகமத்தில் இயேசுவுக்கு அடுத்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் யோசேப்பு தானியேல் போன்ற பரிசுத்தவான்கள். யோசேப்பிற்குள்ளாக நல்ல சுபாவம் காணப்பட்டது. அவன் எங்கிருந்தாலும் தன் வேலையை முழுமுயற்சியோடு செய்ய கற்றுக்கொண்டவன். போத்திபாரின் அரண்மனையில் வேலை செய்தாலும், சிறைச்சாலையில் வேலை செய்தாலும் மிகவும் பக்குவமாக நேர்த்தியாக யாரையும் ஏமாற்றாமல் வேலை செய்தவன். தேவ பிள்ளைகளும் தங்களுடைய வேலை ஸ்தலத்தில் உண்மையாக வேலை செய்ய வேண்டும். நல்ல இடத்திலிருந்தாலும், உங்களுக்கு பிரியமில்லாத இடத்தில் இருந்தாலும் முழுமனதோடு உற்சாகத்தோடு வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, யோசேப்பிற்குள்ளாக இருந்த நல்ல குணாதிசயம் பாவத்தை விட்டு ஓடுகிறவனாக காணப்பட்டான். போத்திபாரின் மனைவி அவனை நித்தம் வந்து கவர்ச்சித்தும், சற்று நேரம் அங்கே இருப்போம் என்று பாவத்தோடு அவன் விளையாடவில்லை. மாறாக, அந்த இடத்தை விட்டு ஓடிப்போகிறவனாக காணப்பட்டான். அந்த பாவம் செய்ய சந்தர்ப்பம் எப்படியாக இருந்தது என்று பார்த்தால், தனிமையான இடம், தனிமையாக ஒரு பெண் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால் ஒருபோதும் ஆண்டவரோடு தனிமையாக இருக்கும் நேரத்தை தவிர மற்றெந்த நேரத்திலும் தனிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் தனித்திருக்க அனுமதிக்காதீர்கள், அவர்கள் கதவை பூட்டி தூங்க அனுமதிக்காதீர்கள். அவரகள் தனிமையில் இருக்கும்போது தேவையற்ற காரியங்களை சிந்திக்கவும், பார்க்கவும், மற்றவர்களிடம் பேசவும் அந்த தனிமையான இடம் வழிவகுத்துவிடும். அதுபோல எந்த ஒரு பெண்ணையும் தனியாக சந்திக்காதீர்கள். கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் எந்த ஆண்களையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். பில்லி கிரஹாம் அவர்களை எந்த ஒரு பெண்ணும் வந்து ஜெபிக்கவோ ஆலோசனைக்கோ வந்தால், அவர்கள் நான்கு ஆண்களை தாண்டி தான் பில்லி கிரஹாமை சந்திக்க முடியும். அப்படியாக அவர் தன்னுடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டார். ஒரு நபர் சொன்னார் இந்த உலகத்தில் கதவை மூடிக்கொண்டு செய்கிற எந்த ஒரு காரியமும், ஒரு நாளில் வெளியே வந்து விடும் என்பதாக. ஆகையால் தேவபிள்ளைகள் தனிமையான இடம், பெண்ணோடு தனிமை என்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.
அப்படிப்பட்ட பாவத்தை விட்டு ஓடுகிற சுபாவம் நமக்கு இருக்குமென்றால், யோசேப்பை உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தியவர், உங்களையும் உயர்த்துவார். நீங்கள் வேலை செய்கிற இடத்தில் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று சொன்ன தேவன் உங்களையும் மேன்மைப்படுத்துவார். யோசேப்பின் தேவை பார்வோனுக்கு முக்கியமாக இருந்தது, அதுபோல, உங்களுடைய தேவை உங்கள் வேலை ஸ்தலத்தில் முக்கியம் என்பதை உயர் அதிகாரிகள் அறிந்து, உங்களை உயர்த்த ஸ்தானத்தில் இருக்கும்படி கர்த்தர் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org