கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார் (2 சாமு. 6:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JfAodKzSa8c
வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற கர்த்தருடைய பெட்டி, உடன்படிக்கையின் பெட்டி, சாட்சியின் பெட்டி என்பதெல்லாம் ஒன்றையே குறிக்கிறது. இதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாய் காணப்பட்டது. மோசேயின் இரண்டுகற்பலகைகளும், பொற்பாத்திரத்தில் மன்னாவும், ஆரோனுடைய துளிர்த்தகோலும் இதற்குள்ளாய் காணப்பட்டது. ஆசரிப்பு கூடாரத்தில் மகா பரிசுத்தஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு தாவீதின் நாட்களில் ஓபேத்ஏதோமின் வீட்டில் காணபட்டவேளையில், தேசம் அறிய கர்த்தர் அவனையும் அவன் வீட்டாரையும் ஆசீர்வதித்தார்.
உடன்படிக்கைப் பெட்டி இயேசுவுக்கு அடையாளமாய், அவருடைய பிரசன்னத்திற்கு அடையாளமாய் காணப்படுகிறது. இயேசு தங்குகிற வீடு ஆசீர்வதிக்கப்படும்.
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார் (லூக்கா 19:2-5). சகேயு ஆண்டவரை தன்வீட்டில் ஏற்றுக்கொண்டவேளையில், அவனை ஆபிரகாமுடைய குமாரனாய் மாற்றி, அவனுடைய குடும்பத்திற்கு அன்று கர்த்தர் இரட்சிப்பை கட்டளையிட்டார். இயேசுவை ஏற்றும்கொள்ளும் வீடு இரட்சிக்கப்படும்.
இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள் (லூக்கா 10:38). அவளுடைய சகோதரனாகிய லாசரு மரித்தவேளையில் கர்த்தர் ஒரு அற்புதத்தை செய்து, அவனை உயிரோடு எழுப்பி அவர்கள் துக்கத்தை சந்மோஷமாய் மாற்றினார். இயேசுவை ஏற்றும்கொள்ளும்போது உங்கள் குடும்பத்தின் துக்கம் சந்தோஷமாய் மாறும்.
ஆபிரகாம் கர்த்தரை தன்வீட்டில் ஏற்றுக்கொண்டபோது, அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன், அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார் (ஆதி. 18:10). அனேக வருஷங்கள் பிள்ளையில்லாமல் இருந்த ஆபிரகாமை கர்த்தர் ஆசீர்வதித்து ஈசாக்கை கொடுத்து மகிழப்பண்ணினார். உங்கள் வீடுகளில் கர்த்தரை ஏற்றுக்கொள்ளும்போது உங்கள் தேவைகளை சந்திக்கிற தேவன் அவர்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வீட்டை கர்த்தர் ஆசீர்வதிக்க விரும்புகிறார். உங்கள் வீட்டில் தங்கவிரும்புகிறார். உங்களுக்கு சமாதானம் தரவிரும்புகிறார். இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து; அவனோடே போஜனம்பண்ணுவேன்; அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி. 3:20). ஓபேத்ஏதோமைப் போல உஙகள் வீட்டில் கர்த்தரை ஏற்றுக்கொள்வீர்களா?. என்றால் எல்லாவிதங்களிலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவது உறுதி.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org