யூபிலி, விடுதலையின் ஆண்டு (Jubilee, Year of Proclaiming Liberty).

ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி,     தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்,  அது உங்களுக்கு யூபிலி வருஷம், அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப்போகக்கடவன் (லேவி. 25:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sDnXHbrslZ8

யூபிலி என்ற எபிரேய வார்த்தைக்கு ஆட்டுக்கடாவின் கொம்மை பயன்படுத்தி எக்காளத்தை ஊதுவது என்பது அர்த்தமாகும். ஏழு வருடங்களின் ஏழு சுழற்சி முடிந்து,     அதாவது நாற்பத்தொன்பது  வருடங்கள் முடிந்து,     ஐம்பதாவது வருஷம் யூதர்களின் யூபிலி  ஆண்டாகும். அது அவர்களுக்குப் பரிசுத்தமும்,     பண்டிகை கொண்டாட்டமுமான ஆண்டு. அப்போது அவர்கள் எக்காளத்தை ஊதி,     தேசம் முழுவதற்கும் விடுதலையைக் கூறுவார்கள். நிலங்களுக்கும்,     அடிமையாய் கொண்ட மனிதர்களுக்கும் நிபந்தனையற்ற  முழுவதுமான விடுதலையின் ஆண்டாகும். அந்த ஐம்பதாவது வருஷம் யூதர்கள் நிலங்களில் பயிரிடுவதில்லை. கர்த்தர் ஏழாவது ஏழு வருட சுழற்சியின் ஆறாவது ஆண்டில் மூன்று வருடங்களுக்குரிய பலனை நிலங்களில் கட்டளையிடுவார். ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும்,     விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,      நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்,     அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.  நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து,     ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்,     அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள் என்று லேவி. 25:20,    21,    22ம் வசனங்கள் கூறுகிறது. கர்த்தர் மூன்று வருடங்களின் பலனை ஒரு வருடத்தில் உங்களுக்குத் தர வல்லமையுள்ளவர். ஈசாக்கு விதை விதைத்த ஆண்டில் கர்த்தர் அவனுக்கு நூறு மடங்கு ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். மூன்று மாதங்களில் ஓபேத்ஏதோமின் குடும்பத்தைத் தேசம் அறிய ஆசீர்வதித்து உயர்த்தினார்.  நாம் ஆராதிக்கிற தேவனால் எல்லாம் கூடும்.

கர்த்தருடைய ஜனங்கள் கிறிஸ்து இயேசுவினால் மீட்கப்பட்டவர்கள். கல்வாரிச் சிலுவையில் தன்னுடைய ரத்தத்தை முழுவதுமாய் கிரயமாய்ச் செலுத்தி,     நம்மைப் பாவத்தினின்றும்,     சாபத்தினின்றும்,     சத்துருவிடமிருந்தும் இயேசு மீட்டெடுத்தார். யூதர்கள் ஐம்பது வருடங்கள் காத்திருக்கும் போது தான்,     யூபிலி ஆண்டு வரும்,     ஆனால் நமக்குக் கல்வாரிச் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த  ஆண்டவருடைய சமூகத்தில் நம்பிக்கையோடு வரும் எந்த வேளையிலும் மீட்பின் மேன்மையை   உணருகிறோம். சிலுவைக்கு முன்பு வாழ்ந்த யோபு பக்தன் தன்னுடைய வேதனையின் நாட்களில்,       என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று விசுவாச அறிக்கையிட்டான். இயேசுவின் சிலுவையின் அன்பின் மேன்மையை உணர்ந்த நாம்,     நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டவர்கள்,     இயேசுவின் ரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள்,     நாம் நமக்குரியவர்கள் அல்ல என்ற உணர்வோடு,     நன்றியுடன் வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.  ஒரு நாள் நாம் பரலோகத்திற்குச் செல்லும் போதும்,     மீட்கப்பட்ட ஜனங்களாய் மீட்பின் புதிய பாடலைப் பாடி ஆட்டுக்குட்டியானவரை ஆராதிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae