ஏழு பண்டிகைகள் (Seven Feasts).

லேவி 23:44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XJY66Ly5N4Y

ஐந்து வகையான பலிகளை போல ஏழு வகையான பண்டிகைகளை குறித்து ஆவியானவர் லேவியராகமம் 23ஆம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். தேவ ஜனங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் பண்டிகைகளை கொடுத்திருக்கிறார். ஏழு என்ற எண்ணானது லேவியராகமம் புஸ்தகத்தில் பல முறை வருகிறதாய் காணப்படுகிறது. ஏழாவது நாள், ஏழாவது வாரம், ஏழாவது மாதம், ஏழாவது வருஷம் என்பது தொடர்ச்சியாக ஏழு முறையும் வருகிறதாய் காணப்படுகிறது. கர்த்தர் கொடுத்த பண்டிகைகள் தொடர்வதற்கு முன்பாக இருப்பது Sabbath day, அதாவது பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள்.

கர்த்தர் கொடுத்த முதலாவது பண்டிகை பஸ்கா பண்டிகை. மாதத்தின் 14ஆம் நாள் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார் (லேவி 23:5). ஆண்டவர் அடிமையாய் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை அவருடைய இரத்தத்தால் மீட்டுக்கொண்ட நாளை நினைவுகூரும் நாள் தான் பஸ்கா பண்டிகை. அது சத்துருவின் கையிலிருந்து, இயேசுவின் இரத்தத்தால் நம்மை மீட்டுக்கொண்ட நாளை குறிக்கிறதாய் காணப்படுகிறது.

இரண்டாவது பண்டிகை புளிப்பில்லா அப்பப் பண்டிகை (லேவி 23:6). இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு வந்ததை இந்த பண்டிகை குறிக்கிறது. நம்முடைய பழைய மனுஷனை விட்டு , சுத்திகரிக்கப்பட்டு, புதிய உடன்படிக்கையின் புது மனுஷனாக வாழும் வாழ்க்கைக்கு அடையாளமாக புளிப்பில்லா அப்பப் பண்டிகை காணப்படுகிறது.

மூன்றாவது பண்டிகை முதற்பலனின் பண்டிகை (லேவி 23:9-14). முதற்பலன் கர்த்தருக்குரியது. ஆபேல் தலையீற்றானவைகளில் முதலானதை கர்த்தருக்கென்று கொடுத்தான். அது நம்முடைய அர்ப்பணிப்பை குறிக்கிறதாய் காணப்படுகிறது.

நான்காவது பண்டிகை பெந்தேகோஸ்தே பண்டிகை (லேவி 23:15-21). பெந்தேகோஸ்தே என்பது ஐம்பதாம் நாளை குறிக்கிறது. சுமார் 1500 வருடங்களுக்கு பிறகு ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இந்த உலகில் ஊற்றப்பட்டார். ஐம்பதாவது நாளில் இறங்கிய ஆவியானவர் இன்றும் நம்மோடு இருக்கிறார்.

ஐந்தாவது பண்டிகை எக்காள பண்டிகை (லேவி 23:23-25). கர்த்தரை தொழுதுகொள்ளுவதற்கும், யுத்தத்திற்கு செல்லும்போதும், வனாந்திரத்திலிருந்து புறப்படும்போதும் இஸ்ரவேல் ஜனங்கள் எக்காளத்தை ஊதுவார்கள். ஒரு நாள் வரும், எக்காள சத்தம் தொனிக்கும், அப்பொழுது கர்த்தராகிய இயேசு நமக்காக மேகங்கள் மீது வருவார்.

ஆறாவதாக, பாவநிவாரண பண்டிகை (லேவி 23:26-32). பிரதான ஆசாரியனாகிய இயேசுகிறிஸ்து நமக்காக பாவநிவாரண பலியாக சிலுவையில் தன்னை தானே ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாய் காணப்படுகிறது.

ஏழாவது பண்டிகை, கூடார பண்டிகை (லேவி (23:33-43). இந்த பண்டிகையில் இஸ்ரவேல் ஜனங்கள் ஏழு நாள்கள் கூடாரத்தில் இருந்து எப்படி கர்த்தர் தங்கள் முற்பிதாக்களை வனாந்திரத்தில் நடத்திகொண்டுவந்தார் என்று நினைத்து நன்றி செலுத்துவார்கள். நாமும் குறைந்தபட்சம் வருஷத்தில் ஏழுநாளாவது ஒரு முறுமுறுப்புமில்லாமல் நன்றி செலுத்துவோமென்றால், நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் வருத்தங்களும் சோர்வுகளும் மாறும். இந்த பண்டிகை நம்முடைய ஆண்டவர் இந்த உலகில் அரசாட்சி செய்வதற்கு அடையாளமாய் காணப்படுகிறது. இயேசு ஆளுகை செய்யும்போது ஒரு முறுமுறுப்பும் இருக்காது. சந்தோஷமும் சமாதானமும் நமக்கு காணப்படும். கண்ணீர் இருப்பதில்லை, வருத்தம் இருப்பதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org