யோசுவாவும் காலேபும் (Joshua and Caleb).

எண் 14:6-8 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Itq1khEMgAQ

மோசே பன்னிரண்டு பேரை தெரிந்துகொண்டு கானான் தேசத்தை வேவு பார்த்து வரும் படி சொன்னான். இந்த சம்பவத்தில் நான்கு விதமான சுபாவம் உள்ளவர்களை காணமுடியும்.

முதலாவது, வேவுபார்க்க சொன்ன மோசே இரண்டு விதமான வார்த்தைகளை பேசினான். நான் உங்களை பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு அழைத்துசெல்லுவேன் என்று தேவன் வாக்குக்கொடுத்தபோதும், மோசே பன்னிரண்டு பேரை தெரிந்துகொண்டு அந்த தேசம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரும்படி சொன்னான். தேசம் இப்படியோ, அப்படியோ, எப்படியோ என்ற கேள்விகளை எழுப்பி பன்னிரண்டு பேருடைய உள்ளத்திலும் இரண்டு விதமான கேள்விகளை மோசே விதைத்தான். கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருக்கும்போது ஒருபோதும் இரண்டு விதமான கண்ணோட்டம் உடையவர்களாய் நாம் இருக்க கூடாது.

இரண்டாவதாக, பத்து பேர் துற்செய்தியை கொண்டுவந்தார்கள். இந்த பத்துபேரும் எதிர்மறை புத்தியுடையவர்கள். கோணலும் மாறுபாடுமாய் இருப்பவர்கள். இவர்கள் தான் கூட்டத்தில் இருந்தவர்களில் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்தவர்கள். இன்றும் கிறிஸ்துவ உலகத்திலும் சபையிலும் கூட இப்படி துற்செய்தியை பேசுபவர்களும், துற்செய்தியை பரப்புவர்களுமே அதிகமாய் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக, காலேப் என்பவனின் சாதகமான சுபாவம். காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான் (எண் 13:30). அநேகர் எதிர்மறையாக இருந்தாலும், எது சரியோ அதை தைரியமாக சொல்லும் சுபாவம் உள்ளவன் தான் காலேப். இப்படிப்பட்ட சாதகமான வார்த்தைகளை பேசும் சுபாவம் உடையவர்களாய் நாம் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும்.

நான்காவதாக, மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி யோசுவாவும் காலேபும் சொன்னவைகள் என்றாலும், எண் 13:30ல் காலேப் பேசியதில் இந்த வார்த்தை வேறுபட்டிருப்பதை பார்க்கும்போது, யோசுவாவே இந்த வார்த்தைகளை பேசியிருக்க கூடும். கர்த்தர் நம்மை பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு கொண்டு செல்லுவார் என்று யோசுவா தான் சரியாக உண்மையை பேசினான். யோசுவாவுக்குள்ளாக இருந்த விசுவாசம் நமக்குள்ளாகவும் காணப்பட வேண்டும்.

மோசேயைப்போல இப்படியோ அப்படியோ என்று ஆத்தில் ஒரு காலும் சேத்தில் ஒரு காலும் வைக்கிறவர்களாய் காணப்படலாகாது. பெருங்கூட்டத்தை போல எதிர்மறை எண்ணமுடையவர்களாகவும் இருக்க கூடாது. காலேபை போல சாதகமுள்ள வார்த்தையை பேசுகிறவர்களாய் காணப்படலாம், அதற்கும் மேலாக யோசுவாவை போல கர்த்தருடைய வார்த்தையில் விசுவாசம் உள்ளவர்களாய் காணப்படுவோம். சாதகமான வார்த்தையை பேசிய காலேபும், விசுவாச வார்த்தைகளை பேசிய யோசுவாவும் மாத்திரமே கானானை சுதந்தரித்தார்கள். காலேப் யோசுவாவைப்போல இருக்கும்போது, கர்த்தர் உங்களுக்கும் பாலும் தேனும் ஓடுகிற செழிப்புள்ள வாழ்க்கையை கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org