எண் 20:12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cfQypyTpnqU
ஆண்டவர் கன்மலையை பார்த்து பேசும்படி மோசேயிடம் சொன்னார். ஆனால் அவன் கன்மலையை பார்த்து பேசாமல் இரண்டுதரம் கன்மலையை அடித்துவிட்டான். அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, நீங்கள் என்னை பரிசுத்தம் பண்ணவில்லை என்று சொன்னார். கர்த்தரை பரிசுத்தம் பண்ணுவது என்றால் என்ன? நாம் எப்படி கர்த்தரை பரிசுத்தம் செய்ய முடியும்? கர்த்தரை பரிசுத்தம் செய்வது என்பது, கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதும், அவருடைய வாக்குக்கு கீழ்ப்படிதலும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எண் 20:12ல் என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனீர்கள் என்று கர்த்தர் கூறினார். எண் 20:24ல் மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள் என்று கர்த்தர் கூறினார். ஆகையால் அவிசுவாசமும் கீழ்ப்படியாமையும் அவருடைய நாமத்திற்கு பரிசுத்தக்குலைச்சலை உண்டுபண்ணுவதற்கு சமமாயிருக்கிறது. ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு வருவதை போல, கர்த்தருடைய வார்த்தையின் மீது விசுவாசமாய் இருப்பதும், அவருடைய வாக்குக்கு கீழ்ப்படுவதுமே கர்த்தரை நாம் பரிசுத்தம் செய்வதற்கு சமமாய் இருக்கிறது. நம்முடைய வாழ்வின் நோக்கமே அவருடைய நாமத்தை பரிசுத்தம் செய்வது தான் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் தான் இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்போது உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கற்று கொடுத்தார். இதுவே முதலாவது விண்ணப்பமாய் இருந்தது. நம்முடைய முதலாவது குறிக்கோளும் அவரை பரிசுத்தம் பண்ணுதலாய் இருக்கட்டும்.
விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருக்க முடியாது. ஆபிரகாம் விசுவாசித்து வல்லவனான். விசுவாசம் கேள்வியினால் வரும். விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும். கிறிஸ்த்துவ மார்க்கமே விசுவாசத்தை அடிப்படையாக கொண்டு உள்ளது. ஆகையால் கர்த்தருடைய வார்த்தையின் மேல் எப்பொழுதும் விசுவாசம் உள்ளவர்களாய் காணப்படுவோம்.
அதுபோல, அவருடைய வாக்குக்கு கீழ்ப்படிகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். இயேசு தன்னுடைய பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து இருந்தார். மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது (அப் 5:29). பவுல் ரோமருக்கு எழுதும்போது சொல்லுகிறார், உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன் (ரோம 16:19) என்பதாக. நாமும் கர்த்தருடைய வாக்குக்கு கீழ்ப்படியும்போது ஆண்டவர் நம்மை குறித்து சந்தோஷமடைகிறவராய் இருப்பார்.
இப்படியாக விசுவாசமும் கீழ்ப்படிதலுள்ளவர்களுமாய் இருந்து கர்த்தருடைய நாமத்தை பரிசுத்தம்பண்ணுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org