உபாகமம் 7:22 அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ge7Xz_mMPpo
மோசேயிடம் ஆண்டவர் கூறினார் இஸ்ரவேலுக்கு விரோதமாக வருகிற சத்துருக்களை துரத்திவிடுவேன், ஆனால் ஒரே நேரத்திலல்ல, கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக துரத்துவேன் என்றே கூறினார். வகுப்பறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பல பாடங்களை சொல்லித்தர முடியாது. அப்படி சொல்லிக்கொடுத்தால், மாணவர்களுக்கு ஒன்றும் புரியாது. அதுபோல ஒவ்வொரு சத்துருவையும் துரத்தும்போது நமக்கு கர்த்தர் சில பாடங்களை கற்றுத்தருவார். சிறுபிள்ளையானது, நேரடியாக பன்னிரெண்டாவது வகுப்பு படிக்க முடியாது. அதுபோல தான் ஆண்டவர் நம்முடைய சத்துருக்களை துரத்தும்போதும், நமக்கு சில பாடங்களை கற்று கொடுத்து, படிப்படியாக எல்லா சத்துருக்களை நிர்மூலம் பண்ணுவார்.
சிலருக்கு திடீரென்று லட்சங்களோ, கோடிகளோ வந்து கொட்டினால், அவர்களை கையிலேயே பிடிக்கமுடியாது. சிலருக்கு ஆண்டவர் அவர்களின் தேவைகளை சந்தித்தவுடன், வெகு சீக்கிரத்தில் ஆண்டவரை மறந்து விடுவார்கள். சிலர் சீக்கிரத்தில் சபைக்கு வருவதையும் நிறுத்திவிடுவார்கள். இப்படிப்பட்ட சுபாவம் உடையவர்களாய் மனிதர்கள் இருப்பதாலோ என்னவோ, தேவன் சத்துருக்கள் எல்லாரையும் ஒரே நேரத்தில் துரத்திவிடுவேன் என்று சொல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக துரத்துவேன் என்று கூறுகிறார். சிறந்த உதாரணம் நம்முடைய சாலொமோன் இராஜாவை சொல்லலாம். ஆண்டவர் அவனுக்கு கேட்டதையும் கேளாததையும் ஒரே நேரத்தில் கொடுத்தார். ஆனால் சாலொமோன் ராஜா பிற்காலத்தில் கர்த்தரை விட்டு தூரம் போய்விட்டான்.
யோசுவாவுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் விரோதமாக 31 ராஜாக்கள் வந்தார்கள். கர்த்தர் நினைத்தால் அத்தனை எதிரிகளையும் ஒரே நேரத்தில் சங்காரம் பண்ணியிருக்க முடியும். ஆனால் கர்த்தர் அதை செய்யவில்லை. யோசுவாவின் விரல்களை யுத்தத்துக்கு பழக்குவித்தார். உங்களையும் கர்த்தர் யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பொல்லாத பிசாசு அவனுடைய இராஜ்யத்தை கட்ட, தேவ பிள்ளைகளுக்கு விரோதமாக அநேக ஜனங்களை எழுப்பிவிடுகிறவனாய் காணப்படுகிறான். தேவ ஜனங்களுக்கு விரோதமாக வேலை ஸ்தலங்களிலும், குடும்பத்திலும், சமுதாயத்திலும், அரசாங்கங்களிலும், ஊழியங்களிலும் பிசாசினால் ஏவப்படிகிற அநேக ஜனங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட நபர்களை கர்த்தர் உங்களை விட்டு அகற்ற வேண்டும் என்று நீங்கள் ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் செய்கிறவர்களாயும் இருக்கலாம். கட்டாயமாக, கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு விரோதமாக செயல்படுகிற பிசாசின் பிள்ளைகளை கர்த்தர் துரத்துவார். ஆனால் ஒரே நேரத்திலல்ல, நிச்சயமாக கொஞ்சம் கொஞ்சமாக, உங்களுக்கு அநேக பாடங்களை கற்றுக்கொடுத்து, எல்லா சத்துருக்களை கர்த்தர் துரத்துவார். ஆகையால், எந்த ஒரு பிசாசும் செயல்படுத்துகிற மனிதர்களை கண்டு அஞ்சியோ, கலங்கியோ இருக்க வேண்டாம். யுத்தத்தில் வல்லவர் உங்களோடு கூட இருக்கிறார், அவர் உங்கள் சத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக துரத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org