ஒரு மனிதனின் கட்டளை (A man’s command).

இப்படிக் கர்ததர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை. கர்த்தர்  இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார் (யோசுவா 10:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oo-hEu9BypE

நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ளவர்,     எல்ஷடாய் என்பது அவருடைய நாமம். காண்கிறவைகள் அத்தனையும் அவருடைய வார்த்தையால் உண்டானது. அப்படிப்பட்டவர், ஒரு சாதாரண மனுஷனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிறார் என்பது ஆச்சரியமான உண்மை. இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:  வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்,     என் பிள்ளைகளைக்குறித்தும்,     என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார். ஒரு மனுஷனுடைய சொல்லைக் கேட்டு கர்த்தர் செய்த ஒரு மகத்தான காரியத்தை யோசுவா பத்தாவது அதிகாரத்தில் வாசிக்கமுடிகிறது. யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் யுத்தம் செய்து எரிகோவையும்,     ஆயி பட்டணத்தையும் பிடித்தார்கள்.  இதைப்பார்த்த கிபியோனின் குடிகள் தந்திரமாய் யோசுவாவோடு  சமாதான உடன்படிக்கைச் செய்து கொண்டார்கள். இதையறிந்த  எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக்கு, மற்ற நான்கு ராஜாக்களோடு கிபியோனியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வந்தார்கள். இந்தச் செய்தியை கிபியோனியர்கள்  யோசுவாவுக்கு அறிவித்த உடனே, யோசுவாவும் இஸ்ரவேல்  ஜனங்களும் கிபியோனியர்களுக்கு உதவும் படிக்காக  யுத்தத்திற்குச் சென்றார்கள். எதிரிகள்  இஸ்ரவேலர்களுக்கு முன்பாக ஓடிப்போகையில் கர்த்தர் வானத்திலிருந்து பெரியக் கற்களை விழப்பண்ணி அவர்களில் அனேகரை அழித்துப் போட்டார். இந்த சூழ்நிலையில்,     யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி,     பின்பு சூரியனே,     நீ கிபியோன்மேலும்,     சந்திரனே,     நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும்,     தரித்துநில்லுங்கள் என்று  கட்டளையிட்டான்.  அப்பொழுது இஸ்ரவேலர்கள்  தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும்,     ஒரு மனிதனுடைய சொல் கேட்டு,     சூரியன் தரித்தது,     சந்திரனும் நின்றது,     சூரியன் ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. 

கர்த்தருடைய ஜனங்கள் வேதத்தை வாசிக்கும் போது,     கர்த்தர் நம்மோடு பேசுகிறார். நாம் ஜெபிக்கும் போது, நாம் கர்த்தரோடு பேசுகிறோம். யோசுவா கர்த்தரோடு ஜெபத்திலே பேசி,     பின்பு கட்டளை கொடுத்த வேளையில் தேவனின் சிருஷ்டிகள் அப்படியே அவனுக்குக் கீழ்ப்படிந்தது. மரணமும் ஜீவனும் உங்கள் நாவின் அதிகாரத்தில் காணப்படுகிறது. நீங்கள் இருதயத்தில் விசுவாசித்து,     உங்கள் நாவினால் அறிக்கையிடும் போது,     கர்த்தர் நீங்கள் வேண்டுகிற காரியங்களை  உங்களுக்கு கைகூடிவரும் படிக்குச் செய்வார்.  நூற்றுக்கதிபதி கர்த்தருடைய ஒரு சொல்லின் வல்லமையை அறிந்திருந்தான். ஆகையால் தான் ஒருவார்த்தைச் சொல்லும் என்று வேண்டிக் கொண்டான். அதே அதிகாரத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்நாட்களில் யோசுவாவை போலத் தேவப் பிரசன்னத்தினால் நிறைந்து,     கர்த்தருடைய வார்த்தைகளை உங்கள் இருதயமாகிய பொக்கிஷசாலையில் நிறைவாய் வைத்து,     நீங்கள் உங்கள் நாவினால் கட்டளையிடும் போது,     அது உங்களுக்கு அப்படியே ஆகும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae