ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான் (2 சாமு. 16:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EhApN_2UcYs
உங்கள் நிந்தனைகளின் நிமித்தம் வந்த சிறுமையைப் பார்த்து, கர்த்தர் உங்களுக்கு நன்மையை சரிக்கட்டுவார். கர்த்தருடைய பிள்ளைகளின் நிந்தனை நிரந்தரமானதல்ல. நிந்தைகளையும், வேதனைகளையும் அனுபவிக்கிறீர்களா, கர்த்தர் அதற்குப் பதிலாக நன்மையைச் செய்து, உங்கள் நிந்தைகளைப் புரட்டிப் போடுகிற நாட்கள் துரிதமாய் வருகிறது.
தாவீது, தன் குமாரனாகிய அப்சலோமின் நிமித்தம், ராஜ்யபாரத்தை இழந்து, தன் உயிரைக் காப்பாற்ற வனாந்தரத்திற்கு நேராகச் சென்றுகொண்டிருந்த வேளையில், சவுல் வீட்டு வம்சத்தானாகிய சீமேயி என்பவன் தாவீதை, இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப் பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்று தூஷித்துக் கொண்டு பின்சென்றான். தாவீதின் வீரர்கள் அவன் தலையை எடுக்க விரும்பியும், அவர்களைத் தாவீது தடுத்து நிறுத்தி, அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார், என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான்; அவன் தூஷிக்கட்டும் அவன் அப்படிச் செய்யக் கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார், ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான். அப்படியே தாவீதிற்கு கர்த்தர் நன்மை செய்து, மீண்டும் ராஜ்யபாரத்தைத் திருப்பிக்கொடுத்தார்.
உங்கள் நிந்தைகளின் நிமித்தம் நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக கர்த்தருடைய முகத்தை நோக்கிப்பாருங்கள். அன்னாளை, அவளுடைய சக்களத்தி அவளுக்கு பிள்ளைகள் இல்லாததினால் துக்கப்படும்படியாக மிகவும் விசனப்படுத்தி, மனமடிவாக்குவாள். சீலோவிலே கர்த்தருடைய ஆலயத்தில் அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணி ஜெபித்தாள். கர்த்தர் அவளுடைய ஜெபத்தைக் கேட்டு நிந்தையை மாற்றி நன்மை செய்தார். ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலனைக் கர்த்தர் தந்தருளுவார்; இலச்சைக்குப் பதிலாகத் சந்தோஷம் உண்டாகும். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள், கர்த்தா உங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org