அப்பொழுது ஆபிரகாம்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர், பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார் (ஆதி. 18:32).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Shl31fb8N-c
சோதோம் கொமோராவின் பாவம் கர்த்தருடைய சமூகத்தில் எட்டினது. கர்த்தர் அதைப் பார்த்து அறியும் படிக்குப் பரலோகத்தை விட்டு பூமியில் இறங்கி வந்தார். வந்த வேளையில், அதின் பாவத்தின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருந்ததினால் அதை அழிக்கச் சித்தம் கொண்டார். கர்த்தருடைய பிள்ளைகளே, அனேக வேளைகளில் கர்த்தரின் கோபாக்கினை வெளிப்படுவதற்கு தேசத்தின் குடிகளின் பாவங்கள் காரணமாயிருக்கிறது. நம்முடைய தேவன் பாவிகளை நேசித்தாலும் பாவங்களை வெறுக்கிறவர். பாவங்களை விட்டு மனம் திரும்புவதற்குப் பல தருணங்களைத் தருகிறவர், தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி எச்சரிக்கிறவர். ஆனால் மனம் திரும்பாமல் இருக்கும் போது, அவர் எரிச்சலுள்ளவராய், பட்சிக்கிற அக்கினியாய் மாறுவார்.
ஆபிரகாம் தேவனுடைய சினேகிதனாய் காணப்பட்டதினால், நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பதில்லை என்று கர்த்தர் தீர்மானித்தார், காரணம் ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதையும் அறிந்திருந்ததினால், அவனிடம் தான் செய்யப்போவதை அறிவித்தார். கர்த்தருடைய சினேகிதராய் நீங்கள் காணப்பட்டால் வரப்போகிற காரியங்களைக் கர்த்தர் உங்களுக்கு அறிவிப்பார். பரிந்து பேசி ஜெபிக்கிற ஒருவனுக்குத்தான் கர்த்தர் வரப்போகிற காரியங்களை முன்னறிவிப்பார். ஆபிரகாம் கர்த்தரிடம், துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக, நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக, சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்று பரிந்து பேசினான், ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அந்த தேசத்தை அழிப்பீரோ என்று கேட்ட வேளையில், நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தல முழுவதையும் இரட்சிப்பேன் என்று கர்த்தர் சொன்னார். நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது, கடைசியில் பத்து நீதிமான்கள் இருந்தால் அந்த தேசத்தை அழிப்பீரோ என்று ஆபிரகாம் கேட்டபோது, கர்த்தர் சொன்னார் நான் அழிப்பதில்லை. ஆபிரகாம் நினைத்திருக்கக் கூடும், தன் சகோதரனுடைய மகனாகிய லோத்து, அவன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நீதிக்குரிய ஜீவியம் செய்யக் கூடும், ஆகையால் சோதோம் அழிக்கப்படுவதில்லை. ஆகையால் பரிந்து பேசுவதை நிறுத்தி தன் இடத்திற்குத் திரும்பி போனான். ஆனால் பத்து நீதிமான்கள் கூட காணாமல் போனதினால், கர்த்தர் வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
கர்த்தருடைய பிள்ளைகள் நீதிக்குரிய ஜீவியம் செய்தால் தேசத்தின் குடிகள் உங்கள் நீதியினிமித்தம் அழிக்கப்படுவதில்லை. தேசத்தின் குடிகளின் எதிர்காலம் நீதிக்குரிய ஜீவியம் செய்து ஜெபிக்கிற கர்த்தருடைய பிள்ளைகளின் கரங்களில் காணப்படுகிறது. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் (2 நாளா. 7:14) என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது.
நீதிமானாய் காணப்படுவது எப்படி? நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை, நமக்காகப் பிதாவாகிய தேவன் கல்வாரி சிலுவையில் பாவமாக்கினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம்பாவங்களறக் கழுவ நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, அவருடைய இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 5:9). நாம் இயேசுவின் மேல் வைக்கிற விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறோம் என்று ரோமர் 5:1 கூறுகிறது. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து, அவரை ஏற்றுக்கொள்ளும் போது பிள்ளைகள் என்ற பாக்கியத்தைக் கர்த்தர் தருகிறார். பூமிக்கு உப்பாக, உலகத்திற்கு வெளிச்சமாக, சாட்சியின் ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிக்கும் போது நாம் கர்த்தருடைய பார்வையில் நீதிமான்களாய் காணப்படுறோம். ஆபிரகாமைப் போலத் திறப்பிலே நின்று விசுவாசத்தோடு ஜெபிக்க நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, ஆபிரகாமின் விசுவாசத்தை நீதியாய் கருதின தேவன், நம்மையும் நீதிமான்களாய் பார்ப்பார். நாம் தேவன் தேடுகிற நீதிமான்களில் ஒருவராய் காணப்படும் பொழுது கர்த்தர் நம்முடைய தேசங்களை அழிப்பதில்லை. ஆகையால் நீதியாய் ஜீவிக்கவும், திறப்பிலே நிற்கவும் நம்மை முழுவதும் அர்ப்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar