1 இராஜா 18:21. அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_xx-IKAIhjQ
இருமனமுள்ளவர்கள் மனவுறுதி இல்லாதவர்கள். எல்லாவற்றிற்கும் வளைந்துகொடுப்பவர்கள். ஆண்டவரை ஆராதிக்க சபைக்கும் வருவார்கள், அதேவேளையில், பாகாலுக்கும் வளைந்துகொடுப்பார்கள். இவர்களே இருமனமுள்ளவர்கள். தங்கள் வழியில் நிலையில்லாதவர்களாய், மதில்மேல் நிற்கிற பூனையை போல நாம் காணப்படலாகாது.
தாவீது பாவம் செய்தபோது நாத்தான், அந்த பாவத்தை எப்படி தாவீது இராஜாவுக்கு சுட்டிக்காட்டுவது? பேசாமல், அதை சுட்டிக்காட்டாமலே இருந்துவிட்டால் என்ன? என்றெல்லாம் தன்னுள்ளத்தில் இருமனமுள்ளவனாக யோசித்துக்கொண்டிருக்கவில்லை. தைரியமாக தாவீதை பார்த்து, நீயே பாவம் செய்த மனுஷன் என்று கூறினான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, யோவான் இதை சுட்டிக்காட்டலாமா? வேண்டாமா ? என்ற இருமனமுள்ளவனாக யோசித்துக்கொண்டு இருக்கவில்லை. பின்விளைவுகளை குறித்து சற்றும் கவலைப்படாமல், தைரியமாக சொன்னான், நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்ல என்று. இப்படி யோவானை போல, நாத்தான் தீர்க்கதரிசியைப்போல தைரியமாக முடிவெடுக்க வேண்டும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் அனலாகவும் குளிராகவும் இருந்தால், ஆண்டவர் வாந்திபண்ணி போடுவார். நாம் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடக்கக்கூடாது. சபைக்குள்ளாக துப்பாக்கியுடன் ஒரு தீவிரவாதி வந்து, இதுவரைக்கும் ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் இன்று ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று கூறினால், எத்தனை பேர் துப்பாக்கிக்கு பயந்து ஞானஸ்நானம் எடுப்பார்கள். இவர்கள் மதில்மேல் நிற்கும் பூனைகள். வசதிக்கு ஏற்ப வளைந்துகொள்ளுபவர்கள். பிசாசு தான் எப்பொழுதும் இருமணமுள்ளவனாக இருப்பான். சபைக்கு வெளியே இருந்து விசுவாசிகளுக்கு எதிரியை போல செயல்படுவான்; அதேவேளையில், சபைக்குள்ளிருந்தும், விசுவாசிகளுக்கு நண்பனை போல தன்னை காண்பித்துக்கொள்ளுவான். இப்படி இரண்டு வேடங்களை போட்டு செயல்படுகிற விசுவாசிகளாய் நாம் சபையில் காணப்படலாகாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று எலியாவாய் வந்த யோவான் சொன்னான். நாம் ஒவ்வொருவரும் கனிகொடாத இருமனமுள்ளவர்களாய் அல்ல; கனிகொடுக்கிற, ஒருமணமுள்ளவர்களாய், ஒன்றையே யோசித்து, கர்த்தரையே எல்லாவற்றிலும் சார்ந்திருப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org