என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன், உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்(சங். 40:8).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TfyhlWDozGY
ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கும் படிக்குக் கிருபை செய்த தேவனுக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம். ஒரு வருடத்தின் பத்துமாதங்களையும் கடக்கும் படிக்குக் கர்த்தர் தயவு பாராட்டினார். கர்த்தருடைய பிள்ளைகள் இந்த புதிய மாதத்தில் தேவனுக்குப் பிரியமானது என்ன என்பதைச் சோதித்துப் பார்த்து அதைச் செய்ய விரும்புங்கள். கர்த்தாவே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் என்று ஜெபம் பண்ணுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்வதே உங்கள் நோக்கமாய் காணட்டும். ரிச்சர்ட் உம்ராண்ட் என்ற தேவ மனுஷன் பதினான்கு வருடங்கள் கம்யூனிச சிறைச்சாலைகளில் காணப்பட்டார். அவர் தேவனைப் பிரியப்படுத்த விரும்பியதாலும், அவரை மறுதலிக்காததினாலும் சிறைச் சாலையில் காணப்படவேண்டியதாயிற்று. பல கொடூரமான உபத்திரவங்களையும் அவர் அனுபவித்தார். அவர் விடுதலையாகி வரும் போது ஆண்டவர் கூறினாராம், யாக்கோபு ராகேல் என்ற ஒரு பெண்ணின் மேல் வைத்த பிரியத்தினால் பதினான்கு வருடங்கள் ஆடு மேய்த்தான், நீயோ என்மேல் வைத்த பிரியத்தினால் பதினான்கு வருடம் சிறைச்சாலையில் காணப்பட்டாயே என்று, அவர் இயேசுவின் மேல் வைத்திருந்த பிரியத்தை மெச்சினாராம். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் ஆண்டவருக்குப் பிரியமானதைச் செய்ய உங்களை முழுமையாய் அர்ப்பணியுங்கள்.
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின் பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன் என்று சங்கீதக்காரன், சங்கீதம் 119:47ல் எழுதினார். கர்த்தருடைய வசனங்கள் அவருக்குப் பிரியமானதாய் காணப்பட்டது. உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது என்று எரேமியா 15:16ல் அவர் எழுதினார். அவர்களைப் போல, நீங்களும் கர்த்தருடைய வார்த்தையில் உங்கள் முழுப் பிரியத்தை வையுங்கள். அதிகமாய் வேதத்தை வாசிக்கவும், தியானிக்கவும் உங்களைச் சமர்ப்பியுங்கள். உங்களுடைய அனுதின மன்னா கர்த்தருடைய வார்த்தையாய் காணப்படட்டும். நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கவும், கேட்கவும், கைக்கொள்ளவும் செய்யும் போது அது தேவனைப் பிரியப்படுத்தும். அப்போது அவர் உங்களை ஆசீர்வதித்து, பாக்கியவான்களாய் மாற்றுவார்.
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் என்று சங் 37:23ல் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் வழிகள் செவ்வையாய் காணப்படும் போது கர்த்தர் உங்கள் மேல் பிரியமாயிருப்பார். உங்கள் தாறுமாறுகளை உங்களை விட்டு முற்றிலும் அகற்றிவிடுங்கள். கர்த்தர், தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும், புனிதனுக்குப் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுவார் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் உத்தமமாய் அவரைப் பின்பற்றுங்கள், உண்மையாய் அவரைச் சேவியுங்கள், எல்லாவிதங்களிலும் ஆண்டவரைக் கனம் பண்ணுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae