ஆசைகள் (Desires).

ராஜாவாகிய சாலொமோன்,     பார்வோனின் குமாரத்தியை  நேசித்ததுமல்லாமல்,     மோவாபியரும்,     அம்மோனியரும்,     ஏதோமியரும்,     சீதோனியரும்,     ஏத்தியருமாகிய அந்நிய  ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான் (1 இரா. 11:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mpfRMitmRJw

ஆசைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகிறது. சிலருடைய ஆசைகள் நன்மையானதைப் பற்றியது,     வேறு சிலருடைய ஆசைகள் அழிவுக்கானது. இயேசுவுக்கு ஒரு ஆசையிருந்தது,     அவர் சிலுவையில் பாடுபடுவதற்கு முன்பு பஸ்காவை தன்னுடைய  சீஷர்களோடு ஆசரிக்க வேண்டும் என்று,     அப்படியே அவர் ஆசரித்தார். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு,     அவனுடைய தேகத்தைவிட்டுப் பிரிந்து,     கிறிஸ்துவுடனேகூட இருக்கவேண்டும் என்று   ஆசை காணப்பட்டது,     அது அதிக நன்மையாயிருக்கும் என்று அவன் கருதினான். ஆகையால் எதற்காக அவன் பிடிக்கப்பட்டேனோ அதைப்   பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்  இலக்கை நோக்கித் தொடர்கிறவனாய் அவன் காணப்பட்டான். ஆபிரகாம் கிறிஸ்துவுக்கு  முன்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு  வாழ்ந்தவனாயிருந்தும்,     கிறிஸ்துவின் நாளைக் காண ஆசையாயிருந்தான்,     அதை விசுவாசக் கண்களில் கண்டு களிகூர்ந்தான். இந்நாட்களில் காணப்படுகிற நமக்குள்ளாய் இப்படிப்பட்ட நல்ல ஆசைகள் காணப்பட வேண்டும்.  இயேசுவுக்குப் பிரியமாய் வாழவேண்டும் என்ற ஆசை காணப்பட வேண்டும்,     நம்முடைய ஆயுளின் நாட்களில் சில ஆத்துமாக்களையாகிலும் கிறிஸ்துவுக்காய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைக் காணப்பட வேண்டும். ஆண்டவருக்காக  எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற ஆசை காணப்பட வேண்டும்,     இவை தேவனுடைய பார்வையில் உகந்ததாய் காணப்படும்.

தீமையான ஆசை உடையவர்களைப் பற்றியும் வேதம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலோடு ஊழியம் செய்து கொண்டுவந்த தேமாவுக்கு திடீரென்று உலக ஆசை வந்துவிட்டது,     ஆகையால் பவுலை விட்டுப் பிரிந்து சென்று விட்டான். சிலருக்கு எல்லாத் தீமைக்கும் வேராய் காணப்படுகிற பணத்தின் மேல் ஆசை வந்துவிடும்,     அதற்காய் இராப்பகலாய் பிரயாசப்படுவார்கள்,     தேவனுக்குரியதையும் கொடாமல் காணப்படுவார்கள். மகா ஞானியாகிய சாலொமோன் அந்நிய ஸ்திரீகள் மேல் ஆசை வைத்துக் காண்கிறவர்களையெல்லாம் மனைவிகளாகவும் மறுமனையாட்டிகளாகவும் கொண்டான். ஆதாம் ஏவாளிலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் கர்த்தர் நிர்ணயித்திருந்தும்,     இஸ்ரவேலில் ராஜாவாக தெரிந்தெடுக்கப்படுகிறவர்கள்  அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்,     அதாவது விவாகம் செய்ய வேண்டாம் என்று கர்த்தர் உபா.17:17ன் படி கட்டளையிட்டிருந்தும் இவன் புறஜாதி ஸ்திரீகளின் மேல் அதிகமாய் ஆசை வைக்கிறவனாய் காணப்பட்டான். அதின் விளைவு,     அவர்கள் இவன் இருதயத்தை அவர்களுடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்யும்படிக்குச் சாயப்பண்ணினார்கள். சாலொமோன் தன்னுடைய வயோதிப நாட்களில் கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு,     சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும்,     அம்மோனியரின்  அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்,     அவைகளுக்கு மேடைகளை,     பலிபீடங்களை,     ஆலயங்களைக் கட்டினான். கடைசியில் அவனுடைய பொல்லாத ஆசை அவனை ஆண்டவரை விட்டுப் பிரித்தது. கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் ஆசைகள் உங்களைத் தேவனோடு நெருங்கும் படிக்கு,     சஞ்சரிக்கும் படிக்குச்  செய்கிறதா? இல்லை தேவனை விட்டு பிரியும் படிக்குச் செய்கிறதா? உங்களை உய்த்து ஆராய்ந்து பார்த்து அனுதினமும் வாழக் கர்த்தர் உதவிசெய்யட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae