நற்சான்றிதழ் (Good conduct certificate).

ரூத் 3:10. அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/srtFuYnuGnk

சிலர் ஒரு குறிப்பிட்ட பணி அல்லது திட்டத்தில் சிறந்த செயல்திறனை காண்பித்தால், சிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளுவார்கள். குறிப்பிடத்தக்க சாதனைகள் அல்லது மைல்கற்களை அடைந்தாலும் சான்றிதழ் வழங்கப்படும். அப்படியாக சிலருடைய நல்ல நடக்கைகளை பார்த்தும் சில நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கும். அதுபோல, ரூத்தின் நல்ல நடத்தையை பார்த்த போவாஸ் அவளுக்கு ஒரு நற் சான்றிதழை வழங்குகிறான். அதற்கு காரணம் அவளுடைய முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் அவள் பிந்தின நற்குணம் உத்தமமாயிருந்தது. அவளுடைய நற்குணத்தை போவாஸ் மெச்சிக்கொண்டான். ரூத் தன்னுடைய கணவனை இழந்தபோதிலும், அவள் தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகவில்லை. அவள் தன் நடக்கையில் பரிசுத்தத்தை காத்துக்கொண்டாள். உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு என்று 1 தீமோ 5:3ல் நாம் வசிக்கிறோம். அதுபோல அவள் உத்தம விதவையாய் தன்னுடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டாள். அவள் தன்னுடைய நடக்கையில் நற்குணத்தை வெளிப்படுத்தினாள். குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது என்று நீதி 31:10 கூறுகிறது. அதின்படி, ரூத்தின் குணம் முத்துக்களை பார்க்கிலும் விலையுயர்ந்ததாய் இருந்தது. இன்று அநேக ஸ்தீரிகள் விலையேறப்பெற்ற முத்துக்களை, தங்கத்தை, வைரத்தை பல நகைக்கடைகளில் தேடுவதைப்பார்க்கிலும், தங்களுக்குள்ளாகவே குணசாலி, நற்குணம் போன்ற முத்துக்களை தேடுவது முக்கியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதுபோல எலியா என்ற தீர்க்கதரிசி, ஒரு விதவையின் வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, அவனுடைய நடக்கையை பார்த்த விதவை சொன்னாள், இவர் தேவ மனுஷன் என்பதாக. இப்படியாக நற்சாட்சி பெற்று நற்சான்றிதழை எலியா பெற்றுக்கொண்டான்.

அதுபோல நாமும் நம்முடைய எல்லா நடக்கைகளிலும் நற்குணத்தை காண்பிக்க வேண்டும். போவாஸிடம் நற்சான்றிதழை பெற்றுக்கொண்ட ரூத்தை போல, நாம் எல்லாரும் பரலோக போவாஸாகிய இயேசுவிடம் இருந்து நற்சாட்சியையும், நற்சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வேண்டும். யோபுவுக்கு கர்த்தர் கொடுத்த நற்சான்றிதழ், யோபு உத்தமன் என்பதாய் காணப்படுகிறது. தாவீதுக்கு கர்த்தர் கொடுத்த நற்சான்றிதழ், தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவன் என்பதாய் காணப்படுகிறது. மோசேக்கு கர்த்தர் கொடுத்த நற்சான்றிதழ், மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்பதாய் காணப்படுகிறது. இப்படிப்பட்ட நற்சான்றிதழை நாமும் பரலோக போவாஸிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org